வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

தர்மபுரி, ஆக.9: தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலன்(40). விவசாயியான இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் குடும்பத்தினருடன் அருகில் உள்ள தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தபோது, அங்கு பைக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே, உள்ளே சென்றனர். அங்கு, மர்ம நபர்கள் 2 பேர் பொருட்களை திருடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மடக்கி பிடித்து கம்பைநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், தர்மபுரி மாவட்டம் அவரைக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார்(29), சபரி(29), என்பதும், கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வீட்டில் திருடிய ரூ.2,700 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: