×

நீண்டகால உள்துறை அமைச்சர்: அத்வானியை பின்னுக்கு தள்ளிய அமித் ஷா

 

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சராக பணியாற்றும் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் சாதனையை முறியடித்து, நாட்டின் நீண்டகால உள்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி கடந்த 1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரை, அதாவது 2,256 நாட்கள் நாட்டின் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அவருக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோவிந்த் பல்லப் பந்த், கடந்த 1955 ஜனவரி 10 முதல் 1961 மார்ச் 7 வரை, அதாவது 6 ஆண்டுகள் 56 நாட்கள் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்தார். இந்த நிலையில், அத்வானியின் சாதனையை முறியடித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய வரலாறு படைத்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மே 30ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற அவர், இன்றுடன் 2,258 நாட்களை நிறைவு செய்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370வது சட்டப்பிரிவை நாடாளுமன்றத்தில் நீக்குவதாக 2019ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 5ம் தேதி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 மே 30ம் தேதி நாட்டின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, 2024 ஜூன் 9 வரை அப்பதவியில் இருந்தார். பின்னர், ஜூன் 10ம் தேதி மீண்டும் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். உள்துறை அமைச்சகத்துடன், நாட்டின் முதல் கூட்டுறவுத் துறை அமைச்சர் என்ற பொறுப்பையும் அமித் ஷா வகித்து வருகிறார். இதற்கு முன்பு, குஜராத் மாநில உள்துறை அமைச்சராகவும், பாஜகவின் தேசியத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், அமித் ஷாவின் பதவிக்காலம் உள்நாட்டுப் பாதுகாப்பில் பல முக்கிய மாற்றங்களைக் கண்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, புதிய குற்றவியல் நீதிச் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது, வடகிழக்கு மாநிலங்களில் நீடித்த பிரச்னைகளுக்கு அமைதி ஒப்பந்தங்கள் மூலம் தீர்வு கண்டது போன்றவை கூறலாம். மேலும், அவரது பதவிக்காலத்தில் நக்சல் நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Minister ,Amit Shah ,Advani ,Delhi ,Union Interior Minister ,BJP ,L. K. ,interior minister ,Congress Party ,Govind Pallap Bant ,
× RELATED கனிமொழி எம்பி தலைமையில் திமுகவின்...