6 விரைவு ரயில்களை கோவை வழியாக இயக்க வலியுறுத்தி துண்டு நோட்டீஸ்

 

கோவை, மார்ச் 1: வடமாநிலத்தில் இருந்து வரும் 6 விரைவு ரயில்களை கோவை ரயில்வே ஸ்டேஷன் வராமல், இருகூர் போத்தனூர் வழியாக இயக்கும் திட்டத்தை கைவிடவேண்டும், கோவையில் இருந்து மதுரை, நெல்லை, நாகர்கோயில், தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும், கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில்களை விட வேண்டும், சிங்காநல்லூர், பீளமேடு ரயில்வே ஸ்டேஷன்களில் கோவை வந்து செல்லும் ரயில்களை நிறுத்த வேண்டும்,

கோவை மேட்டுப்பாளையம் ரயில் வழிப்பாதையை இரு வழியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, கோவையை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் கோவை ரயில் நிலையத்தில் நேற்று பயணிகளுக்கு துண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்து கட்சியினர் இந்த துண்டு நோட்டீஸ்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில், த.பெ.தி.க சார்பில் வே.ஆறுச்சாமி, பன்னீர்செல்வம், மதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் சிவசாமி, தமிழ்நாடு திராவிட சுயமரியாதை கழகம் சார்பில் நேருதாஸ், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் மலரவன், சிபிஐ-எம்எல் சார்பில் பாலசுப்பிரமணியன், பிலோமினா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post 6 விரைவு ரயில்களை கோவை வழியாக இயக்க வலியுறுத்தி துண்டு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: