வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.50,000 நூதன மோசடி; வாலிபருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது

பூந்தமல்லி: வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி, பணமோசடியில் ஈடுபட்ட வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித்(23). இவர் வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் திருமலைநகர் பகுதியில் வசித்து வருகிறார். யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு அஜித் வீட்டுக்கு 3 பேர் வந்துள்ளனர். அவர்களுடன் அஜித் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த மூன்று பேர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜித்தை சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த அஜித்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இப்புகாரின்பேரில், ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(27), கார்த்திக்(22), தினேஷ்(20) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர். அதில், வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி 3 பேரிடமும் அஜித் ரூ.50 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால் வங்கியில் கடன் வாங்கி கொடுக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதுபோல் அவர்களது நண்பர்களிடம் அஜித் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். பணத்தை கேட்க வந்த இடத்தில் வாய்தகராறு ஏற்பட்டதில் கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.50,000 நூதன மோசடி; வாலிபருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: