கிருஷ்ணகிரி, டிச.4: மாற்றுத்திறனாளிகள் நலனில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 46,728 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐஇஎல்சி பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளி தின நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சரயு, பர்கூர் மதியழகன் எம்எல்ஏ முன்னிலையில் துவக்கி வைத்து, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், பேட்ரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்கலிகள், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை என 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹7 லட்சத்து 44 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாடுகள் மாற்றத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3ம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இன்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் ஒருங்கிணைத்து, தடைகளை தகர்ப்போம், அனைவரையும் உள்ளடக்கிய சமுதாய வளர்ச்சி பாதை அமைப்போம் என்ற இலட்சிய நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நின்று சிரமப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நேரில் சென்று மனுக்களை பெற்று கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் சென்றடைய ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 10 வட்டாரங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, 411 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கிட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 46,728 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர பரமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 40 சதவீதத்திற்கு மேல் மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தொழு நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் கை, கால் பாதிக்கப்பட்ட 5,550 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தலா ₹2 ஆயிரம் வீதம் ₹8.88 கோடி இசிஎஸ் முறையில் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை பெற்று வாழ்வில் வளம் பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், கிருஷ்ணகிரி நகர்மன்றத் துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, தாசில்தார் மகேஸ்வரி, பர்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், ஐஇஎல்சி பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் எழில்வர்மன், ஐஇஎல்சி சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் இலியாஸ் சார்லஸ், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி தாளாளர் சத்யபூசன்தாஸ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post 46,728 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை appeared first on Dinakaran.