4 மணி நேரமாக கெஞ்சியும் கேட்காததால் மனைவியை கொன்ற லாரி டிரைவர்

புதுச்சேரி, டிச. 12: மனைவியின் நடத்தையில் சந்தேகத்தில் இருந்த லாரி டிரைவர், 4 மணி நேரமாக கெஞ்சியும் குடும்பம் நடத்த கோவை வர மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவியை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுச்சேரி, உருளையன்பேட்டை, முல்லை நகரில் வசித்தவர் ரோஜா (30). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றிய ஷெரிப் உடல்நிலை பாதித்து இறந்து விட்டார். இதையடுத்து அதே கம்பெனியில் வேலை செய்த கோவையைச் சேர்ந்த லாரி டிரைவர் விக்னேஷ் (24) என்பவரை ரோஜா 2 வதாக திருமணம் செய்தார். சமீபகாலமாக தம்பதியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்படவே, ரோஜா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் புதுவையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார்.

இதற்கிடையே கடந்த 9ம் தேதி தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைக்க புதுச்சேரி வந்த விக்னேஷ், ரோஜாவை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் கொலை வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மனைவி மீதான நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை விக்னேஷ் கொன்றது தெரியவந்தது. ரோஜாவின் உடல் நேற்று முன்தினம் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.

இந்த நிலையில் மனைவியை படுகொலை செய்த கணவர் விக்னேஷ், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கொலை தொடர்பாக விக்னேஷிடம் தனிப்படை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தன்னைவிட வயதில் மூத்த ரோஜாவை திருமணம் செய்து குடும்பம் நடத்திய விக்னேஷ், நாளடைவில் குழந்தைகள் விவகாரம் தொடர்பாக அவரிடம் அடிக்கடி பிரச்னை செய்துள்ளார். இதையடுத்து கணவரை பிரிந்த ரோஜா தனது தாய் வீட்டுக்கு 2 குழந்தைகளுடன் வந்து தஞ்சமடைந்தார்.

ஒரு கட்டத்தில் கணவரின் சந்தேக தொல்லை தாங்க முடியாமல், விரக்தியில் தனது செல்போனை சில தினங்களுக்கு முன்பு ரோஜா வீசியெறிந்து உடைத்துள்ளார். அதன்பிறகு தனது மனைவியை போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. விரக்தியின் உச்சத்திற்கு சென்ற லாரி டிரைவர் விக்னேஷ், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும், இல்லாவிட்டால் அவரை தீர்த்துக்கட்டிவிட வேண்டும், என்ற முடிவுக்கு வந்துள்ளார். ரோஜாவை தீர்த்துக்கட்ட கோவையில் கத்தியை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டு புதுச்சேரி வந்துள்ளார். கடந்த 9ம்தேதி காலை 8.30 மணிக்கு மனைவி தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்த அவர், தொடர்ந்து 4 மணி நேரம் ரோஜாவிடம் கெஞ்சி கூத்தாடியுள்ளார். தனது மனைவி தரையில் அமர்ந்திருந்த நிலையில், ஒருகட்டத்தில் ஷோபாவில் அமர்ந்திருந்த விக்னேஷ், தரையில் மனைவியின்
அருகில் அமர்ந்து கெஞ்சியுள்ளார்.

திடீரென திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரோஜாவின் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்துள்ளார். உடனே லாரி டிரைவர் தனது கழுத்தை அறுக்க முயற்சித்தபோது கூச்சலிடவே அங்கிருந்த மகள் கதறி அழுதுள்ளார். இதையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த ரோஜாவின் தாயார், தனது மருமகன் தற்கொலைக்கு முயற்சிப்பதை தடுத்துள்ளார். இதையடுத்து அவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தி தவறி முதல்மாடியிலிருந்து கீழே விழுந்தது. உடனே பால்கனி வழியாக ராஜேசும் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உயிர் பிழைத்து விட்டார் என்று தெரிந்து கொண்ட மாமியார் தனது மகளை தேடியபோது அருகிலுள்ள அறையில் ரத்த வெள்ளத்தில் ரோஜா பிணமாக கிடப்பதை பார்த்து கதறியுள்ளார். தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார், தற்கொலைக்கு முயன்ற விக்னேஷை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாக போலீசாரின் முதற்கட்ட தகவலில் வெளியாகி உள்ளது.

The post 4 மணி நேரமாக கெஞ்சியும் கேட்காததால் மனைவியை கொன்ற லாரி டிரைவர் appeared first on Dinakaran.

Related Stories: