₹8.36 கோடியில் ரயில் நிலையம் விரிவாக்கம்; மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு சாய்வுதள பாதை; பார்வையற்றோர் நடந்து செல்ல தொடுஉணர் தரைதளம்

திருவாரூர், செப். 30: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருவாரூரில் ரயில் நிலைய விரிவாக்கம் ரூ.8 கோடியே 36 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்திற்குட்பட்ட திருவாரூர் ரயில் நிலையமானது கடந்த 1861ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. தற்போது 161 ஆண்டுகளை கடந்துள்ள இந்த ரயில் நிலையம் திருவாரூரிலிருந்து நாகை வழிதடத்தில் நாகூர் மற்றும் காரைக்கால் மார்கத்திலும், தஞ்சை வழிதடத்தில் நீடாமங்கலம் மற்றும் திருச்சி மார்கத்திலும், மயிலாடுதுறை வழிதடத்தில் சென்னை வரையிலும் மற்றும் திருத்துறைப்பூண்டி வழிதடத்தில் காரைக்குடி மார்கத்திலும் ரயில்கள் சென்று வருகிறது இது 4 முனை ரயில் நிலையமாக இருந்த வருகிறது.

இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்கள் கோரிக்கையின் பெயரில் ஏற்கனவே ரயில் நிலைய விரிவாக்க நிதி திட்டத்தின் மூலம் 3 பிளாட் பாரங்களிலும் மின்தூக்கி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அமரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் ரூ.8 கோடியே 36 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலைய கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீனப்படுத்தப்பட உள்ளது. மேலும் பயணிகளை ஈர்க்கும் விதமாக ரயில் சந்திப்பின் முகப்பில் அலங்கார வளைவுகள் மற்றும் விசாலமான நுழைவாயில் அமைக்கப்படவுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் தற்போது இடநெருக்கடியில் உள்ளதால் மாற்றிடத்தில் விரிவாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் நடந்து செல்வதற்காக நடைபாதை, அனைத்து நடைமேடைகளிலும் கூடுதலான இருக்கைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், பாதுகாப்பான மேற்கூரைகள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக சாய்வு தள பாதையும் அமைக்கப்பட உள்ளது. பார்வையற்றோர் நடந்து செல்ல ஏதுவாக தொடுஉணர் தரைதளமும், பயணிகள் காத்திருப்பு அறை, டிக்கெட் முன்பதிவு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

The post ₹8.36 கோடியில் ரயில் நிலையம் விரிவாக்கம்; மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு சாய்வுதள பாதை; பார்வையற்றோர் நடந்து செல்ல தொடுஉணர் தரைதளம் appeared first on Dinakaran.

Related Stories: