பல்லாவரம்: பல்லாவரத்தில் இரவு பணியில் இருந்த காவலரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பரங்கிமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் வீரசெல்வம் (34), முதல்நிலை காவலரான இவர், பல்லாவரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காவலர் வீரசெல்வம், நேற்று முன்தினம் இரவு கன்டோன்மென்ட் பல்லாவரம், பொன்னியம்மன் கோயில் தெருவில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையை கடந்து மறு முனைக்கு சென்றபோது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 இளைஞர்கள் காவலரை இடிப்பதுபோல் மின்னல் வேகத்தில் வந்துள்ளனர். இதனால், நிலைதடுமாறிய காவலர் வீரசெல்வம் கீழே விழாமல் இருக்க அவர்களது பைக்கின் கைப்பிடியை பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் எங்களது வண்டியையே பிடிக்கிறாயா எனக்கூறி, காவலர் வீரசெல்வத்தின் கையை ஒருவர் பின்னால் மடக்கி பிடித்துக்கொள்ள, மற்ற இருவரும் காவலரின் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காவலருக்கு முகத்தாடை மற்றும் மூக்கில் பலத்த காயமடைந்து ரத்தம் வழிந்தது.
அப்போது காவலர், அக்கம் பக்கதினர் உதவியுடன் குடிபோதையில் இருந்த 3 பேரை மடக்கிப்பிடித்து, பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த காவலர் வீரசெல்வத்தை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, காவலரை தாக்கிய 3 வாலிபர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், பம்மலை சேர்ந்த ரோகித் (23), விக்னேஷ் (25), முகமதுஆசிப் (23) எனவும், காவலர் குறுக்கே வந்து, பைக்கை பிடித்ததால், ஆத்திரத்தில் போதையில் தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கைது செய்யப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும், காயமடைந்த காவலர் வீரசெல்வத்தை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post பல்லாவரத்தில் ரோந்து சென்ற காவலரின் மூக்கை உடைத்த 3 போதை வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.