3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடல் வழியாக தப்பி செல்ல வாய்ப்பு: கடலோர எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

விருதுநகர்: ஆவினில் வேலை தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடல் வழியாக தப்பி செல்ல வாய்ப்புகள் இருப்பதால் கடலோர எல்லைகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன், தனது சகோதரி மகன் ஆனந்திற்கு விருதுநகர் ஆவின் மேலாளர் வேலை வாங்கி தருவதற்கு ரூ.30 லட்சத்தை முன்னாள் அமைச்சர் காளிமுத்து தம்பி விஜய நல்லதம்பியிடம் அளித்தார். ஆவினில் வேலை வாங்கி தராததை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த நவ.15ல் ரவீந்திரன், விஜயநல்லதம்பி மீது புகாரளித்தார். விசாரணையில், விஜயநல்லதம்பி, ரவீந்திரன் உள்ளிட்ட பலரிடம் ஆவினில் வேலைக்காக பணம் வாங்கி ரூ.3 கோடியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்டோரிடம் அளித்த புகாரில், 4 பேர் மீதும் 5 பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்கில் கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு டிச.17ல் தள்ளுபடியானது. அன்று, விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது மனு தள்ளுபடியான தகவலறிந்து ராஜேந்திர பாலாஜி காரில் ஏறி தப்பி தலைமறைவானார்.மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் தேடி வந்த நிலையில், தலைமறைவாக பதுங்கி இருக்கும் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், தொடர்பாளர்கள், ஆதரவாளர்கள் உள்பட 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ராஜேந்திர பாலாஜி பெங்களுர், கேரளா, ஆந்திரா, மதுரை, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் 8 தனிப்படை போலீசாரும் தேடி வருகின்றனர். போலீசாரின் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க நேற்று முன்தினம் குற்றப்பிரிவு போலீசார், விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கிடையில் கடல் வழியாக தப்பி செல்ல வாய்ப்புகள் இருப்பதால் கடலோர கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். தூத்துக்குடி முதல் வேதாரண்யம் வரையும், மீனவ கிராமங்களிலும் கண்காணிக்கவும், இந்திய, இலங்கை இருநாட்டு கடல் எல்லைகளில் கண்காணிப்பை அதிகரிக்க ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளிலும் கண்காணிப்பை துவக்கி உள்ளனர்….

The post 3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடல் வழியாக தப்பி செல்ல வாய்ப்பு: கடலோர எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: