2 மாதத்திற்கு மேலாக தொடரும் வன்முறை மணிப்பூரில் இதுவரை 6,000 வழக்குகள் பதிவு: 657 பேர் கைது; போலீசாரின் உயிருக்கு அச்சுறுத்தல்

இம்பால்: மணிப்பூரில் 2 மாதத்திற்கு மேலாக வன்முறை தொடரும் நிலையில் இதுவரை 6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 657 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். கடந்த மே 3ம் தேதி மணிப்பூரில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறின. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். தற்போதும் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், ராணுவம், உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூரில் முகாமிட்டு அமைதியை ஏற்படுத்த முயன்ற போதும், தீர்வு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 77 நாட்களுக்கு பின்னர் பிரதமர் மோடி, முதன் முறையாக மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களை நிர்வாணப்படுத்திய சம்பவம் தொடர்பாக தனது மவுனத்தை கலைந்து கண்டனம் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெவ்வேறு காவல் நிலையங்களில் எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாக நபர்களுக்கு எதிராக 70 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளைச் சேர்ந்த 657 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரில் வன்முறை தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 75 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அவற்றை விசாரிப்பதற்கு தேவையான போலீஸ் இல்லை. பெரும்பாலான போலீசார், சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த போலீசார், மற்றொரு சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு பணிக்கு செல்ல விரும்புவதில்லை. அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போலீசாரும் பின்வாங்குகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய முயன்றால், அவர்கள் வசிப்பது மலைப்பகுதி என்பதால் தலைமறைவாகி விடுகின்றனர். சில நேரங்களில் அவர்களை பிடித்தாலும் கூட, உள்ளூர்வாசிகள் கும்பலாக ஒன்றுகூடி, குற்றம் சாட்டப்பட்ட நபரை வலுக்கட்டாயமாக விடுவிக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடமாற்றுவதில் பிரச்னைகள் இருப்பதால், பல்வேறு பகுதிகளில் தற்காலிக சிறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறைகள் யாவும், பாதுகாப்புப் படையினரின் முகாம்களுக்கு அருகில் உள்ளன’ என்று கூறினர்.

The post 2 மாதத்திற்கு மேலாக தொடரும் வன்முறை மணிப்பூரில் இதுவரை 6,000 வழக்குகள் பதிவு: 657 பேர் கைது; போலீசாரின் உயிருக்கு அச்சுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: