1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு விரைவில் எட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘‘தொழில்துறையில் முதன்மை மாநிலமாக முன்னேற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற எங்கள் இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் குழுமத்தின் துணை நிறுவனமான ரேடியல் ஐடி பார்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தமிழ்நாட்டில் புதியதொரு தொழில் புரட்சி நடந்து கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக, ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் கேப்பிட்டாலேண்ட் நிறுவனமும் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது. கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று இந்த நேரத்தில் நான் உறுதி அளிக்கிறேன். . தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022 கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னால் வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம், புத்தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், தமிழ்நாடு உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும். இந்த வேகத்தை பார்க்கின்றபோது ‘‘2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம்’’ என்ற எங்கள் இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்குள் வளர்ந்து கொண்டே போகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசோ சிஸ்டம், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீமென்ஸ் , அமெரிக்க நிறுவனமான ஜி.இ. ஏவியேஷன் உடன் இணைந்து, மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையங்கள் மற்றும் தொழில் புத்தாக்க மையங்களை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது.

திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூரில் இருக்கின்ற சிப்காட் தொழிற் பூங்காக்களில், உலகத் தரம் வாய்ந்த தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, ஒரு துடிப்பான தகவல் தொழில்நுட்ப சூழலமைப்புடன் வளர்ச்சிக்குத் திறன் இடைவெளி ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்று தான், என்னுடைய கனவுத்திட்டமான, நான் முதல்வன் திட்டத்தை முழு முனைப்புடன் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். உயர்கல்வி கற்பிக்கின்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கி, அவர்கள் துறையில் முதன்மையானவர்களாக திகழச் செய்ய வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோள். இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

இந்த சீரிய முயற்சிகள் காரணமாகதான், தமிழ்நாட்டில், முதலீடுகளின் வரத்து வளர்ச்சியடைந்து வருவதை கண்கூடாக பார்க்கின்றோம். இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கின்றோம். உங்களைப் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள். பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதற்கு முன்னதாகவே, கேப்பிட்டாலேண்ட் நிறுவனம் இந்த அதிநவீன பன்னாட்டுத் தொழில்நுட்ப பூங்காவை தொடங்கி இருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் தொழில் முயற்சிகள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர். ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவன தலைவர் மிகுவல் கோ, கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா நிறுவன தலைமைச் செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா, இந்திய வணிகப் பூங்காக்கள் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் கவுரி சங்கர் நாகபூஷணம், சென்னை செயல்பாடுகள் தலைவர் வேலன், மிட்சுபிஷி எஸ்டேட் நிறுவனத்தின் செயல் அலுவலர் மாசநோரி இவாசே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு விரைவில் எட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: