10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான ஆங்கில திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு: தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முடிவடைந்து, போட்டியாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் மேற்கண்ட தேர்வுகளுக்காக தங்களை தயார் செய்து வருகின்றனர். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தல் பணியில் பள்ளி  ஆசிரியர்களுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது. திருப்புதல் தேர்வு நடக்கும் நாளில் பயிற்சி வகுப்புக்கும் செல்ல வேண்டியுள்ளதால் தேர்வுத் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆசிரியர்களின் இந்த கோரிக்கையை ஏற்று, அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: நடப்பு 2021-2022ம் கல்வி ஆண்டில் பள்ளியில் படிக்கும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முறையே 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 10ம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடப்பதால், அந்த தேதியில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆங்கிலப் பாடத்தின் திருப்புதல் தேர்வு 17ம் தேதி நடத்த ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேதி மாற்றம் குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார். …

The post 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான ஆங்கில திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு: தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: