10ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

போச்சம்பள்ளி, நவ.15: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பணங்காட்டூர் பகுதியை சேர்ந்த 16வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமியின் படிப்பை பாதியில் நிறுத்திய அவரின் பெற்றோர்கள், வரும் 16ம் தேதி (நாளை) சிறுமியின் உறவினரான 21 வயதுடைய நபருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இதையடுத்து திருமண பத்திரிக்கை அடித்து, உறவினர்களுக்கு வழங்கி வந்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் 1098 என்ற எண்ணுக்கு போன் செய்து, இளம் வயது திருமணம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதை அறிந்து பர்கூர் சமூக பாதுகாப்பு ஊர்நல அலுவலர் இந்திரா, சைல்டு லைன் அலுவலர் சுந்தரம்மாள் மற்றும் வருவாய் அலுவலர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியவதி ஆகியோர் சிறுமியின் பெற்றோரை அழைத்து, இளம் வயதில் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். பெண்ணிற்கு 18வயது நிரம்பியவுடன் திருமணம் செய்ய வேண்டும் என அறிவுரை கூறினர். பின்னர் அவரது பெற்றோரிடம் திருமணம் செய்ய மாட்டோம் என எழுதி வாங்கிய பின்னர், திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

The post 10ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: