நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு கிராம மக்கள் போராட்டம்

சத்தியமங்கலம், ஜூலை 24: வருவாய்த்துறை சார்பில் வனத்துறைக்கு நிலம் வழங்குவதற்காக அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை கோட்டமாளம் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோயிலை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து 25 ஏக்கர் நிலத்தை கோயிலுக்கு கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அரசின் மற்ற துறைகளுக்கு வழங்கும்போது அதற்கு பதிலாக 2 மடங்கு நிலம் வனத்துறைக்கு வழங்க வேண்டும் என்பது விதிமுறை. இந்நிலையில், பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வழங்கப்பட உள்ள 25 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக தாளவாடி தாலுகாவில் உள்ள கோட்டமாளம் கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவு உள்ள அனாதீன புறம்போக்கு நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக தாளவாடி தாசில்தார் பெரியசாமி, பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் பழனிக்குமார், சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா, பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், நில அளவையர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கோட்டமாளம் கிராமத்திற்கு சென்றனர்.

அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் நிலத்தை அளவீடு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தை ஒட்டியுள்ள 50 ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு வழங்கினால் கால்நடை மேய்ப்பதற்கும், அப்பகுதியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை செய்து விடுவார்கள். மேலும், இந்த நிலம் வனப்பகுதியானால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்துவிடும் என அதிகாரிகளிடம் முறையிட்டதோடு தாளவாடி தாசில்தார் பெரியசாமியிடம் நிலத்தை எடுக்ககூடாது என மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், உயரதிகாரிகளிடம் தெரிவித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: