கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர், ஜூலை23: திருப்பூர்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் நேற்று தீக்குளிக்க முயற்சித்தார்.

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு செந்தில் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (52). இவரது மனைவி இந்திராணி(45).நேற்று கலெக்டர்  அலுவலகத்துக்கு மனு இந்திரா அளிக்க வந்தார். அப்போது,அவரது இருசக்கர வாகனத்தில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்துள்ளார். ஆகையால்,கலெக்டர் அலுவலக வளாகத்தின் வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் செய்தியாளர் எனகூறிவிட்டு உள்ளே நுழைந்துள்ளார்.பின்னர்,இரு சக்கர வாகனத்தில் மறைந்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திராணி தீக்குளிக்க முயன்றார். இதனிடையே, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இந்திராணியிடம் இருந்த பெட்ரோல் கேனைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்திராணி கூறியது: நான் செந்தில் நகரில் 4 ஆண்டுக்கு முன் நிலம் வாங்கி சொந்தமாக வீடு கட்டியுள்ளேன். இந்நிலையில், எங்களது வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவர் என்னிடம் கடனாக பெரிய தொகை கேட்டு என்னைத் துன்புறுத்தி வருகிறார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளேன். போலீசார் சம்மந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தவில்லை. மேலும், கலெக்டர் அலுவலகத்திலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் விசாரணைக்காக இந்திராணியை வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர் விசாரணையில் அவர் போலி நிருபரின் மனைவி என்று தெரிந்தது. அத்துடன் அவர், பிரஸ் என இரு சக்கர வாகனத்தில் ஒட்டிக்கொண்டு போலீஸ் சோதனையில் தப்பித்து, பெட்ரோல் கேனை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரிந்தது.

Related Stories: