ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை திட்டம் நிறைவேறுமா? வணிகர்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி, மே 22:  ஆண்டிபட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வணிகர்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி நகர் அமைந்துள்ளது. இந்த சாலையின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து பகுதிகளிலும் அகலமான சாலை அமைத்துள்ள நிலையில் ஆண்டிபட்டி நகருக்குள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இதனால் ஆண்டிபட்டிக்குள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக பள்ளி நேரமான காலை, மாலை நேரங்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆண்டிபட்டி பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, எம்.ஜி.ஆர். சிலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை  ஆங்காங்கே  நிறுத்திக் கொள்கின்றனர். இதனால் கூட்ட நெரிசலில் சில சமயங்களில் 108 வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் என பல்வேறு காரணங்களுக்கு செல்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்க கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி ஆண்டிபட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன்பட்டி முதல் கொண்டமநாயக்கன்பட்டி, வைகை அணை சாலை, சக்கம்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம் வழியாக சண்முகசுந்தரபுரம் வரையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்தனர். இதுகுறித்த திட்டவடிவினை ஒப்புதல் பெற அரசுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

ஆனால் புறவழிச்சாலை திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காமல், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் திட்ட வடிவிலேயே கிடப்பில் உள்ளது என்றனர். இது குறித்து வணிகர்கள், வியாபாரிகள் கூறுகையில், ஆண்டிபட்டி நகரில் அமைக்க திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, 108 வாகனங்கள் போன்ற உயிர் காக்கும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதில் செல்லும். மேலும் பள்ளி வாகனங்கள், பால்வண்டிகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லும். எனவே, அரசு ஆண்டிபட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உடனடியாக கைவிடப்பட்ட புறவழிச்சாலை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றனர்.

Related Stories: