10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

விழுப்புரம், மார்ச் 15: விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று துவங்கியது. மாவட்டம் முழுவதும் 48,842 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். முதல் முறையாக பிற்பகலில் இத்தேர்வு நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கடந்த 1ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 299 மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 20,068 மாணவர்கள், 21,003 மாணவிகள் என மொத்தம் 41,071 பேர் 132 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர். இதை தொடர்ந்து கடந்த 6ம் தேதி தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வை 299 மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 19,213 மாணவர்கள், 20,009 மாணவிகள் என மொத்தம் 39,222 பேர் எழுதி வருகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 132 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கின. முதல் முறையாக இத்தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணி வரை நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் 573 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 25,433 மாணவர்கள், 23,409 மாணவிகள் என மொத்தம் 48,842 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்காக 188 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டு நல்ல முறையில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வுப் பணியில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 3080 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் தலைமையில் தனித்தனியாக 476 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடாத வண்ணம் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்று விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை ஆட்சியர் சுப்ரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உடனிருந்தார்.

Related Stories: