காங்கயம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

காங்கயம், மார்ச் 12:காங்கயத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். சுற்று வட்டார கிராமத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வருகின்றனர். சந்தைக்கு பெண்களே அதிக அளவில் வந்து செல்கின்றனர். சந்தை வளாகத்தில் கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில், அசுத்தமாகவும், துர்நாற்றத்துடன், நோய் பரப்பும் இடமாக மட்டுமே இருக்கிறது. கழிப்பறையை பயன்படுத்தவே அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  கிராமங்களிலிருந்து, காய்கறிகளை இங்கு சந்தைப்படுத்த வருவோர், அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். அவசர தேவைக்கும், பஸ் ஸ்டாண்ட் வரை செல்ல வேண்டியுள்ளது. சில நேரங்களில் இப்பிரச்னையால், சந்தை வளாகத்தில் பின்புறம் உள்ள காலியிடம் திறந்த வெளிக் கழிப்பிடமாகவும் மாறிவிடுகிறது.

சந்தைக்கு வரும் பொதுமக்கள் கூறியதாவது: சந்தை வளாகத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது. இடநெருக்கடியால் வாரச்சந்தை நாட்களில், நடைபாதையில் தான் காய்கறிகளை சந்தைப்படுத்த வேண்டியுள்ளது. காலையில் சந்தைக்கு வந்தால் மாலையில் தான் திரும்புகிறோம். இந்நிலையில், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்படுகிறோம். ஆனால் சுங்கம் மட்டும் தவறாமல் வசூல் செய்கின்றனர், வசதிகள் செய்து தருவதில்லை. இருக்கும் கழிப்பறையை முழுமையாக பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும். நகராட்சி நிர்வாகம் பணியாளர் நியமித்து பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: