மறியல் போராட்டம் நடத்த மக்கள் முடிவு

சின்னசேலம், மார்ச் 8: அரசு அறிவிப்பில்லாமல் திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சின்னசேலத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் 26, 26ஏ, 26பி  என்ற 3 பேருந்துகள் சின்னசேலத்தில் இருந்து கனியாமூர் கூட்ரோடு வழியாக நமசிவாயபுரம், தொட்டியம், எலியத்தூர், தெங்கியாநத்தம், கடத்தூர் வழியாக கச்சிராயபாளையம் வருகிறது. இதில் மக்கள் நலன் கருதி சில நேரங்களில் தெங்கியாநத்தத்தில் இருந்து பாதரம்பள்ளம் சென்றும் கச்சிராயபாளையம் வருகிறது. இந்த 3 வழித்தட பேருந்துகளால் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன் சின்னசேலம்-கச்சிராயபாளையம் செல்ல பஸ் கட்டணமாக ரூ.8 வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் திடீரென ரூ.8லிருந்து ரூ.14 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை கருதி போராட்டங்களில் ஈடுபடவில்லை. இருந்தாலும் பஸ் கட்டண உயர்வால் மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். இவ்வாறு பஸ் கட்டணம் உயர்த்தியதால் சின்னசேலம் டெப்போ பஸ் கட்டண கலெக்ஷனில் முதலிடம் பெற்றது. இதையடுத்து பஸ் கட்டண வசூலில் சாதனை படைத்ததாக பணிமனை மேலாளருக்கு விருது கிடைத்தது. இந்த நிலையில், தற்போது கச்சிராயபாளையத்தில் இருந்து சின்னசேலம் செல்ல ரூ 14 ஆக இருந்த பஸ் கட்டணம் தற்போது ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணத்தை அரசு  உயர்த்தாமல் சம்பந்தப்பட்ட பணிமனை அதிகாரிகள் தன்னிச்சையாக பஸ் கட்டணத்தை உயர்த்தியது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பஸ் கட்டண உயர்வின் பின்னணியில் ஆளும்கட்சி முக்கிய பிரமுகரும், போக்குவரத்து உயர் அதிகாரிகளும் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசு அறிவிப்பில்லாமல் தேர்தல் நேரத்தில் தன்னிச்சையாக பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்து உள்ளனர். எனவே, அமைச்சர், மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: