சாலை சீரமைப்பு பணியால் மண் மேடாகும் தங்கம்மா ஓடை தூர்வார மக்கள் கோரிக்கை

உடுமலை, பிப். 13:  சாலை சீரமைப்பு பணியால் உடுமலையில் உள்ள தங்கம்மா ஓடை

மண் மேடாகி வருகிறது. ஓடையை தூர்வார பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 உடுமலை நகரில் தங்கம்மா ஓடை உள்ளது. மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் காட்டாற்று வெள்ளத்தின் வடிகாலாக இந்த ஓடை உள்ளது. மேலும் திருமூர்த்தி அணையில் இருந்து 7 குளத்திற்கு தண்ணீர் திறக்கும்போது, குளங்கள் நிரம்பிய பின் உபரிநீர் இந்த ஓடையில் வழிந்தோடும். பின்னர் செஞ்சேரிமலை அருகே உப்பாறு ஓடையில் கலக்கும். ஆனால் பல ஆண்டாக சாக்கடை கழிவுநீர் கலந்தும், புதர் மண்டியும் இந்த ஓடை காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. எனவே, இந்த ஓடையை தூர் வார வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், ஓடையை மேலும் மண்மேடாக்கும் முயற்சி நடந்து வருகிறது. தங்கம்மா ஓடை அருகில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

 இதில் தோண்டப்படும் மண்ணை தங்கம்மா ஓடையில் கொட்டி வருகின்றனர். இதனால் ஓடை மண் மேடாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இதை தடுக்க வேண்டும். சாலை அமைக்கும் பணியின் போது எடுக்கப்படும்  மண்ணை வேறு இடத்தில் கொட்ட வேண்டும். தங்கம்மா ஓடையில் செடி, கொடிகளை வெட்டி அகற்றி தூர் வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: