அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்

விழுப்புரம், ஜன. 10:  விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து துறை பணிகள் முன்னேற்றம் குறித்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான பழனிசாமி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை ஆகிய பல்வேறு துறைகளின் அலுவலர்களுடன் துறையின் சார்பாக விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வளர்ச்சிப்பணிகள் குறித்தும், 2017-18ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளின் நிலை குறித்தும், முடிவு பெற்ற பணிகள் குறித்தும், முடிக்கப்படாத பணிகள் அதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அந்தந்த துறைகளின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதிகளை சரியான முறையில், வளர்ச்சிப் பணிகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் துறைகளின் தேவைகள் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) பிருந்தாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், சப்-கலெக்டர்கள் திருக்கோவிலூர் சாரு, திண்டிவனம் மெர்சிரம்யா, கள்ளக்குறிச்சி காந்த், விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொறுப்பு) கார்த்திகேயன், துணை ஆட்சியர்(பயிற்சி) காயத்ரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர்கள் நிவாசன், ரத்தினமாலா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சத்தியநாராயணன், நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: