கிருஷ்ணகிரி வழியாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கிருஷ்ணகிரி, நவ.8: காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கிருஷ்ணகிரி வழியாக டெல்லி செல்வதாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை உறுதி செய்ய சரியான உணவை உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வை பரப்பும் வகையில் ஆரோக்கிய பாரத பயணம் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி திருவனந்தபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி வழியாக செல்லும் இப்பேரணி, வரும் 27.1.2019ம் தேதியன்று புதுடெல்லி சென்றடைகிறது. மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாக வரும் 8ம் தேதி மதியம் கிருஷ்ணகிரியை வந்தடையும். மறுநாள் 9ம் தேதி காலை முதல் மாலை வரை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுரங்கம், உழவர் சந்தை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவதானப்பட்டி ஏரி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம், கலைநிகழ்ச்சி, உணவு திருவிழா, மருத்துவ முகாம், பேரணி போன்றவை நடத்துகிறது.

பின்னர், வரும் 10ம் தேதி காலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்படும் இந்த சைக்கிள் பேரணி, மாலை கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை சென்று, அங்கிருந்து பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் வழியாக ஜனவரி 27ம் தேதி புதுடில்லியை அடைகிறது. இந்த பேரணியானது தூய்மை பாரதம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் ஆரோக்கிய இந்தியா போன்ற முக்கிய நோக்கங்களை, உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து பாதுகாப்பான உணவு சாப்பிடுதல், சுகாதாரமான உணவை சாப்பிடுதல், வலுவூட்டப்பட்ட உணவை சாப்பிடுதல் மற்றும் உணவு வீணாவதை தடுத்தல் போன்ற முக்கிய கருப்பொருட்களை பொதுமக்களிடையே பரப்புவதற்கு மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பயன்படுத்தி பாதுகாப்பான உணவு நுகர்வு குறித்து திறனை வளர்த்து, உடல் நலம் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: