மந்தையம்மன் கோயில் திருவிழா கம்பத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

கம்பம், அக். 17: கம்பத்தில் மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கம்பம் உத்தமபுரம் பிரமலைக்கள்ளர் இளைஞரணி மகாசபை அமைப்பு சார்பாக இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தய நிகழ்ச்சிக்கு, சமுதாயத் தலைவர் கம்பம் முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் துரை நெப்போலியன், அதிமுக நகரச் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் ராஜாமணி, எஸ்டிடி இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு உரிமையாளர்கள் தங்கள் மாடுகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு உள்ளிட்ட பிரிவுகளில் 100க்கும் மேற்பபட்ட ஜோடி மாடுகள் பங்கேற்றன. கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய போட்டியில், மாடுகளின் வயது, பரிவுகளை வைத்து போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1500 வரை ரொக்க பரிசும், சிறந்த சாரதிக்கு பரிசுக்கோப்பை, சில்வர் குடம், குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியைக் காண கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உத்தமபாளையம் டிஎஸ்பி சீமைச்சாமி, இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.போட்டியில் கலந்து கொண்ட மாடுகளை கம்பம் கால்நடை டாக்டர் காமேஷ்கண்ணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னரே போட்டிக்கு அனுமதித்தனர்.

Related Stories: