ஆட்டோக்களில் அதிக பயணிகள் கலெக்டர் அலுவலகத்திலேயே அத்துமீறல்

தேனி, செப்.7: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனை போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர். தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு பெறுகின்றனர். இக்கூட்டங்களுக்கு ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு டிரைவர்கள் வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த அத்துமீறலை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்; எச்சரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘டூவீலர்களில் ஹெல்மெட் அணியவில்லை என்பதாக சொல்லி நகர்புறங்களுக்கு மத்தியில், நகரங்களுக்கு வெளியே நெடுஞ்சாலைகளில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களை மடக்கி பிடித்து அபராதம் போட்டு வருகின்றனர். ஆனால், அரசு அனுமதித்த அளவுக்கும் மேலாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளேயே கண்டுகொள்ளாமல் உள்ளனர். வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். எனவே தேனி கலெக்டர் அலுவலகம் மற்றும் தேனி போலீஸ் எஸ்.பி அலுவலகங்களுக்கு பொதுமக்களை அதிகளவில் ஏற்றி வரும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: