இலங்கைக்கு கடத்த இருந்த 93 மூடை மஞ்சள் பறிமுதல்: தொண்டி அருகே பரபரப்பு

தொண்டி: இலங்கைக்கு கடத்த இருந்த 93 மூடைகளில் வைத்திருந்த மஞ்சளை, தொண்டி அருகே கியூபிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது காரங்காடு. கடற்கரைப் பகுதியான இங்கு, கரையை ஒட்டி அடர்த்தியான கருவேல மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளன. இந்த மறைவிடப்பகுதியை பயன்படுத்தி அதிகளவில் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் காரங்காடு கடற்கரை ஓரத்தில் இருந்த கருவேலங் காட்டுக்குள் சமையலுக்கான மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கியூபிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு இரவோடு இரவாக கியூபிரிவு போலீசார் விரைந்தனர். அங்கு 93 மூடைகளில் சமையலுக்கான மஞ்சள்களை கட்டி வைத்திருந்தது தெரிந்தது. இன்று காலை வரை போலீசார் அங்கேயே பதுங்கி இருந்து, யார் இந்த மூடைகளை எடுக்க வருகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால் யாரும் வரவில்லை. பின்னர் மஞ்சள் மூடைகளை கைப்பற்றி, எடுத்து வந்தனர். இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக இங்கு மஞ்சள் மூடைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்கள் குறித்த விசாரணையை கியூபிரிவு போலீசார் வேகப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பறிமுதல் செய்த மஞ்சள் மூடைகளில் இருந்த அடையாளங்களை கொண்டு, அவை எங்கிருந்து வாங்கி வரப்பட்டவை என்பது உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். ராமேஸ்வரத்தில் இதே போல் ஏற்கனவே கடத்தலுக்கு வைத்திருந்த மஞ்சள் மூடைகள் பிடிபட்டன. இலங்கையில் சமையல் மஞ்சள், கிலோ ரூ.3ஆயிரத்திற்கும் மேல் விற்கப்பட்டு வருகிறது. எனவே சமீப காலமாக மஞ்சள் கடத்தல் அதிகரித்துள்ளது. தொண்டி கடற்கரை பகுதியில் ஏற்கனவே போதைப்பொருள், சந்தனமரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைளை வேகப்படுத்தியுள்ளோம்’’ என்றனர்.

Related Stories: