கொரோனா பணியின்போது இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல் கலெக்டர், தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடின

நெல்லை:  கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கேட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் வருவாய் துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடின. தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு பணியில் இரவு, பகலாக வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ேசாதனைச் சாவடிகள், கட்டுப்பாட்டு பகுதிகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருவாய்த்துறையினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தொற்று பரவும் அபாயத்திலும் வருவாய்த்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

எனவே கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.  நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள அலுவலர்களுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2 நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் முடிவு செய்தது.

அதன்படி முதல் நாளான நேற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து அலுவலர்களும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் மாநில செயலாளர் சுப்பு தலைமையில், மாவட்ட செயலாளர் மாரிராஜா, துணைத் தலைவர்கள் முகம்மது புகாரி, முருகேஸ்வரி, பொருளாளர் செல்வகுமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை கலெக்டர் அலுவலகம், நெல்லை, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகங்கள், நெல்லை, பாளை. மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் தாலுகா அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்ேசாடி காணப்பட்டன.

இதேபோல் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் செந்தூர் ராஜூ, மாவட்ட பொருளாளர் செல்வக்குமார், இணைச் செயலாளர் ஞானராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலக டி பிரிவு உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தென்காசி மாவட்டத்திலும் வருவாய்த்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்வேறு அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. 2வது நாளாக இன்றும் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வருவாய் துறையினரின் போராட்டம் காரணமாக அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Related Stories: