டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணை வெளியீடு: மார்ச் 7-ம் தேதி விவசாய சங்கத்தினர் முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு விழா

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டமுன்வடிவை முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கடந்த 20ம் தேதி தாக்கல் செய்தார். இந்த சட்டத்துக்கு தமிழக கவர்னர் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். மேலும், நாகப்பட்டினம்,  கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோலியம் கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட அரசாணையையும்  தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க தடை விதித்து தமிழக  அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு கலோலிகர் நேற்று வெளியிட்டுள்ள அரசிதழில் கூறி இருப்பதாவது: தஞ்சாவூர், திருவாரூர்,  நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக  அரசு அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை.

ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இரும்பு உருக்காலை, செம்பு அலுமினிய உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு,  குளம்புகள் மற்றும் பிற உடல்  பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல்,  எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கை  எரிவாயு ஆய்வு துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம் கொண்டுவந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,  காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க கூட்டமைப்பினர் முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமிக்கு அடுத்த மார்ச் மாதம் 7ம் தேதி திருவாரூரில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற்காக  ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதேபோல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் பாராட்டுவிழா நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: