தள்ளுபடி தந்தாலும் ‘தள்ள’ முடியலயே: வாகன டீலர்கள் கவலை

புதுடெல்லி: பண்டிகை சீசனில் தள்ளுபடிகளை அள்ளி வழங்கியும் கார், டூவீலர்கள் விற்பனை மந்த நிலையிலேயே நீடிப்பதாக, வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் ஆட்டோமொபைல் துறை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், கடந்த 10 மாதங்களாக வாகன விற்பனை சரிந்து வருகிறது. இதனால், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பண்டிகை சீசன் துவங்கியும் விற்பனை மந்தமாகவே உள்ளது. இதுகுறித்து டீலர்கள் சிலர் கூறியதாவது:கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வாகன விற்பனை 21 ஆண்டுகளில் இல்லாத கடும் சரிவை சந்தித்தது. இருப்பினும், பண்டிகை தொடங்கியதால் விற்பனை உயரும் என்ற நம்பிக்கை இருந்தது.

 

வழக்கமாக, விநாயகர் சதுர்த்தி, ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் விற்பனை விறுவிறுப்படையும்.இதற்காக இந்த ஆண்டு வாகனங்களுக்கு ஏற்ப விற்பனை விலையில் இருந்து 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. ஆனாலும், எதிர்பார்த்த விற்பனை இல்லை. கார் மட்டுமின்றி, டூவீலர்கள் விற்பனை கூட படு மந்தமாகவே உள்ளது.உதாரணமாக, மகாராஷ்டிராவில் கடந்த விநாயகர் சதுர்த்தியின்போது 1,200 டூவீலர்கள் விற்பனை ஆகின. இந்த ஆண்டு வெறும் 100 டூவீலர்கள்தான் விற்றுள்ளன. பாரத் ஸ்டேஜ் 6 வாகனங்கள் 2020 ஏப்ரலில் இருந்து விற்பனைக்கு வரும். அதற்கு முன்பாக இருப்புகளை விற்க வேண்டும்.கடைசி நேரத்தில் தள்ளுபடி அதிகமாக கிடைக்கலாம் என்று பலர் வாகனம்  வாங்குவதை ஒத்திப்போட்டுள்ளனர். இதனால், ஆட்டோமொபைல் துறைக்கும், அதை  சார்ந்துள்ள டீலர்களுக்கும் இழப்பு அதிகமாகிக்கொண்டே செல்கிறது என  வேதனையுடன் கூறினர்.

Related Stories: