ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் இனி ஆந்திர மக்களுக்கே: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் ஜெகன்  மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது.  இதனையடுத்து மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்று அதிரடி நடவடிக்கை எடுத்து  வருகிறார். இதற்கிடையே, மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களில் வெற்றிப் பெற்று வாகை சூடியது. இதன் மூலம்  பாராளுமன்றத்தில் நான்காவது மிகப்பெரிய  பலம் வாய்ந்த கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உயர்ந்தது.

ஆனால், அங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை தழுவியது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். தேர்தலின் போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டத்தில்; தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 75% பணியிடங்களை ஆந்திர மாநிலத்தவர்க்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும். அச்சட்டத்தின்படி, தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கும் நிறுவனங்கள் அனைத்துமே, மொத்தப் பணியிடங்களில் 75% இடங்களை ஆந்திர மாநிலத்தவர்களைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும். இது அனைத்து வித பணிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தகுதியான நபர்கள் கிடைக்கவில்லையெனில் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து உள்ளூர் மக்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதற்கான நடமுறைகள் அனைத்தையும் முடித்து, ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் ஒவ்வொரு மூன்று மாதமும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: