திருச்செந்தூர் பங்க்குகளில் ஜூன் 1 முதல் அமல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது: எஸ்.பி. தகவல்

திருச்செந்தூர்:  திருச்செந்தூர் சப்-டிவிஷனில் விபத்தை குறைப்பதற்காக வருகிற ஜூன் 1ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வந்தால் பெட்ரோல் போடுவதில்லை என்று  திருச்செந்தூர், குலசேகரன்பட்டணம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள பங்க் உரிமையாளர்கள் மற்றும் போலீசார் இணைந்து  முடிவு எடுத்துள்ளனர்.  இந்நிலையில் ‘ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று நடந்தது.

எஸ்பி முரளி ராம்பா விழிப்புணர்வு நோட்டீஸ்  வழங்கி  பைக் பேரணியை துவக்கி வைத்தார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சப்- டிவிஷனிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் போலீசாரோடு இணைந்து விபத்தை குறைக்கும் முயற்சியாக வரும் ஜூன் 1ம் தேதி முதல் பெட்ரோல்  பங்குகளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் பெட்ரோல் போடுவதில்லை என்ற புதிய முயற்சியை துவங்கியுள்ளனர். இதற்காக இன்னும் ஒரு வார காலம் விழிப்புணர்வு நோட்டீஸ் கிராம மக்களுக்கு வழங்கப்படும். இந்த புதிய முயற்சி பலன்  அளித்தால் தூத்துக்குடி டவுன், கோவில்பட்டி, வைகுண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு எஸ்பி கூறினார்.

Related Stories: