கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் 6 பெண் வனக்காவலர்கள் நியமனம்

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் புதியதாக 6 பெண் வனக்காவலர்கள் (பாரஸ்ட் கார்டுகள்) நேற்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேனி மாவட்டத்தில் மேற்கு வனப்பகுதி இயற்கை வனப்பகுதியாகவும், கிழக்கு வனப்பகுதி மேகமலை வன உயிரின சரணாலயமாகவும் உள்ளது. இங்கு தேக்கு, சந்தனம், தோதகத்தி உள்ளிட்ட அரியவகை மரங்களும், யானை சிறுத்தை, காட்டுப்பன்றிகள், மரஅணில், சிங்கவால் குரங்கு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், அரியவகை மூலிகைகளும் உள்ளன. தேனி மாவட்ட வனத்துறையில் நீண்ட நாட்களாக பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வந்தது. இதனால் வனப்பகுதியில் நடைபெறும் வனவிலங்குகள் வேட்டை, மரம் வெட்டுதல் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் வனத்துறையில் இதே நிலைமை இருந்து வந்தது.

இந்நிலையில், வனத்துறையில் கூடுதல் பணியாளர்கனை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனக்காவலர் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பெண்களுக்கு 33 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதால் பெண்களும் தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தற்போது பணியில் சேர்ந்து வருகிறார்கள். இதில் கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் மட்டும், தூத்துக்குடி, சிவகங்கை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 6 பெண் வனகாவலர்கள் (பாரஸ்ட் கார்டுகள்) நேற்று சிறப்பு வனக்காவலர்கள் பறக்கும் படை பணியில் சேர்ந்தனர்.

இது பற்றி வனத்துறையினர் கூறுகையில், முதன்முறையாக பெண் வனகாவலர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.

இவர்களுக்கு பறக்கும்படை பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் காடுகளில் சட்ட விரோதமாக கடத்தப்படும் அரியவகை மரங்கள் மற்றும் பொருட்களை தடுத்தல், காடுகளில் பற்றும் திடீர் காட்டுத் தீயை அணைக்கும் பணி போன்றவை குறித்து பயிற்சியளிக்கப்படும். தேனி மாவட்டத்தில் மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு நியமிக்கப்பட்ட 38 பேர்களில் 19 பெண் வனக்காவலரும், மேற்கு இயற்கை வனப்பகுதியில் நியமிக்கப்பட்ட 34 பேரில் 14 பெண் வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த வனச்சரகத்திற்குட்பட்ட காடுகளின் எல்லைப்பகுதி, குற்றச்செயல் நடைபெறும் இடங்கள் குறித்து ரேஞ்சர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பின்னர் கோவையில் 21 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: