திருவனந்தபுரம் உட்பட 6 விமான நிலைய பராமரிப்பு பணிகள்: தேர்தல் அறிவிப்பால் அதானி ஆசையில் மண்

* டெண்டர் எடுத்தும் இல்லை பலன்

* நடத்தை விதியால் முட்டுக்கட்டை

புதுடெல்லி: கவுஹாத்தி உட்பட 6 விமான நிலையங்களில் பராமரிப்பை நிர்வகிக்க அதானி குழும நிறுவனங்கள் டெண்டர் எடுத்துள்ளன. ஆனால் கேபினட் ஒப்புதல் பெற்றே இந்த பணிகளை ஒப்படைக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் முடிவு வரும் வரை அதானி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் இயக்க பணிகளை அரசு தனியார் கூட்டு அடிப்படையில் நிர்வகிக்கும் திட்டத்தை இந்திய விமான நிலைய ஆணையம் அமல்படுத்துகிறது. இதன்படி கடந்த மாதம் கவுஹாத்தி விமான நிலையத்தை பராமரித்து இயக்கும் பணிக்கு ஏலம் நடந்தது. அதானியின் இன்பெரா குழும நிறுவனம் இந்த ஏலத்த்தில் வெற்றி பெற்றுள்ளது.  இதற்கு முன்பு நடந்த ஏலங்களிலும் அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூர், திருவனந்தபுரம், லக்னோ ஆகிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி குழும நிறுவனமே ஏற்றுள்ளது. இதன்படி மொத்தம் 6 விமான நிலைய பராமரிப்பு டெண்டரும் அதானிக்கே சென்று விட்டது.

 விமான நிலைய பராமரிப்பு மற்றும் நிர்வகிப்பில் அதானி குழுமத்துக்கு அனுபவம் இல்லை. இந்த நிலையில் இந்த குழுமத்துக்கே அனைத்து டெண்டர்களும் சென்றது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதானி குழுமத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  டெண்டர் விடும் பணிகள் முடிந்ததால் மேற்கண்ட பணி பொறுப்பை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகே முறையாக விமான நிலைய பராமரிப்பு அதானி குழும வசம் செல்லும்.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. ஏற்கெனவே, ரபேல் விவகாரம் பாஜவுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் அமைச்சரவை ஒப்புதலுக்கு கொண்டு வந்தால் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். எனவே, தேர்தல் வரை அமைச்சரவைக்கு கொண்டுவராமல் இதை கிடப்பில் போட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அதானி குழுமத்தின் லாபம் சரிந்து வருகிறது. கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டுப்படி இந்த நிறுவனத்துக்கு 80.09 கோடி லாபம் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் லாபம் 286.97 கோடி. இத்துடன் ஒப்பிடுகையில் லாபம் 72 சதவீதம் குறைந்துள்ளது. விமான நிலைய பராமரிப்பு பணிகள் அதானிக்கு சென்றால், 50 ஆண்டுக்கு கவலையே இல்லை. ஏனென்றால், இக்ரா நிறுவன ஆய்வின்படி மேற்கண்ட 6 விமான நிலையங்களில், சர்வதேச பயணிகளையும் சேர்த்து கடந்த 2017-18 நிதியாண்டில் 3 கோடி பயணிகள் வந்துள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகம்.  அதானிக்கு மிகுந்த பலனையும் அபரிமிதமான வருவாயையும் அளிக்கும் இந்த பணிகளை அவரது குழுமத்துக்கு ஒப்படைக்க தேர்தல் நடத்தை விதிகளால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் டெண்டரில் வெற்றி பெற்றும் பலன் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

* அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூர், திருவனந்தபுரம், லக்னோ, கவுஹாத்தி விமான நிலையங்களை நிர்வகிக்கும் டெண்டர்களில் அதானி குழும நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

* இந்த பணிகளை அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகே அதானி குழுமத்திடம் ஒப்படைக்க முடியும். தேர்தல் நடத்தை விதி அமலானதால் இதை ஒத்திப்போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

* அதானிக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பணிகளை ஒப்படைப்பது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

* தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசு பதவியேற்ற பிறகுதான் அதானிக்கு பணிகள் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: