காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் உடல் சொந்த ஊர் வந்தது: மக்கள் கண்ணீர் அஞ்சலி

கோவில்பட்டி: ஜம்மு காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள மத்திய ரிசர்வ் படை முகாமுக்கு (சிஆர்பிஎப்) படை வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த  சிவச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் வீர மரணம் அடைந்தனர். இவர்களது உடல் சம்பவம் நடந்த ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டம், அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியிலிருந்து விமானப்படை விமானத்தில் நேற்றிரவு டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நேரடியாக திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

அரசியல் தலைவர்கள் அஞ்சலி

திருச்சியில் சிவச்சந்திரன் உடல் இறக்கப்பட்டு ராணுவ வாகனத்தில் அரியலூருக்கு கொண்டு செல்லப்பட்டது, சுப்பிரமணியனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ராணுவ வாகனத்தில் இன்று மாலை கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்திற்கு வந்தது. ராணுவ வாகனத்தை கண்டதும் சுப்பிரமணியனின் தந்தை, தாய், மனைவி மற்றும் உறவினர்கள் கதறியழுதனர்.  பின்னர் சுப்பிரமணியன் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி, எஸ்.பி. முரளிராம்பா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  

அரியலூர் வீரர்

எம்ஏ.,பி.எட். பட்டதாரியான சிவசந்திரன், கடந்த 2010ம் ஆண்டு சிஆர்பிஎப், படைவீரராக சேர்ந்தார். 2014ல் காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, காந்திமதி (27), என்ற மனைவியும் சிவமுனியன், (2) என்ற மகனும் உள்ளனர். விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்த அவர், விடுமுறை முடிந்து மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற கடந்த 9ம் தேதி காஷ்மீர் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் பலியானார். இவரது மனைவி காந்திமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவசந்திரன் உடல் இன்று திருச்சி வந்தது. அவரது உடலுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் திருச்சியிலிருந்து சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு சிவசந்திரன் உடல் ராணுவ வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

நிர்மலா சீதாராமன் அஞ்சலி

சிவசந்திரன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனிவிமானத்தில் வந்துள்ளார். பாஜ தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று காலை கார்குடி கிராமத்திற்கு வந்து சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சிவசந்திரனின் இறுதி சடங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர். கார்குடி மற்றும் அந்த பகுதி கிராம மக்கள் அனைவரும் கார்குடியில் சிவசந்திரன் வீட்டு முன் சோகமே உருவாக திரண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: