நாகர்கோவிலில் பழமை வாய்ந்த சித்ரா நூலக கட்டிடம் இடிக்கப்படுமா?

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சித்ரா நூலக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் கலைவாணர் கலையரங்கம் எதிரில், அறநிலையத்துறைக்கு ெசாந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் சித்ரா நூலகம் செயல்படுகிறது. மன்னர் காலத்தில் இருந்து இயங்கும் மிகவும் பழமையான நூலகம் ஆகும். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும். இந்த நிலையில் பாலமோர் ரோட்டில் கலைவாணர் கலையரங்கம் எதிரில் இருந்து புதிய சாலை அமைத்து, டென்னிசன் ரோடு வசந்தம் ஆஸ்பத்திரி பின்புற சாலையுடன் இணைக்கும் வகையில் திட்ட சாலை அமைக்க நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்ட சாலைக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலை அமைக்க வேண்டுமென்றால் தற்போது அறநிலையத்துறைக்கு சொந்தமான சித்ரா நூலக கட்டிடத்தை இடிக்க வேண்டும். ஆனால் 100 ஆண்டுகளுக்கும் மேலான இந்த நூலகத்தை இடிக்க கூடாது. இந்து பராம்பரியத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ள இந்த நூலக கட்டிடத்தை  இடித்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று இந்து அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்துள்ளனர்.

இதற்கிடையே தற்போது அந்த கட்டிடத்தில் நகராட்சி சார்பில், அறநிலையத்துறை அதிகாரிகளை எச்சரிக்கும் வகையில் ஒரு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. ஆணையர் சரவணக்குமார் சார்பில் ஒட்டப்பட்டு உள்ள அதில் இந்த கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாக இருப்பதுடன், உறுதிதன்மையின்றி எந்த நேரத்திலும் விழுந்து விடும் நிலையில் சேதமடைந்தும், கேடு விளைவிப்பதாகவும் மற்றும் அபாயகரமானதாகவும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகவும் இருக்கிறது. இந்த கட்டிடத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் உடமைகள் மற்றும் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். எனவே இந்த கட்டிடம், இந்த அறிவிப்பு கண்ட 7 நாட்களுக்குள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் இடிக்கப்பட வேண்டும். அவ்வாறு இடிக்கப்படாமல் இருந்தால், நகராட்சி மூலம் இடிக்கப்படும். இந்த கட்டிடத்தால் ஏற்படும் உடமைகள் சேதம், உயிர் சேதத்துக்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என கூறி உள்ளார். இது குறித்து அறநிலையத்துறை அலுவலக பணியாளர்கள் கூறுகையில், சித்ரா நூலக கட்டிடம் மன்னர் கால கட்டிடம் ஆகும். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்  உள்ளது. பாரம்பரியமான இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டுமென்றால், ெதால்லியல்துறை அனுமதி பெற வேண்டும். மேலும் சித்ரா நூலகம் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இயங்கும். நூலகம் இயங்காத நேரத்தில் வந்து இந்த நோட்டீசை ஒட்டி உள்ளனர். அப்படியே இருந்தாலும் கூட அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் மற்றும் தொல்லியல் துறை தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: