3547 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளில் பன்றிக்காய்ச்சலுக்கு 23 பேர் பலி

* மீண்டும் வேகமாக பரவுவதால் பொதுமக்கள் அச்சம்

நாகர்கோவில்: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பன்றிக்காய்ச்சலுக்கு 23 பேர் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 3315 பேர் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். பன்றிக்காய்ச்சல் (எச்1 என் 1) ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த வைரஸ் காரணமாக பரவி வரும் ஒரு உயிரிழப்பை ஏற்படுத்தும் கொள்ளை நோயாகும். இந்நோய் இன்புளூயன்சா ‘A,’ இன்புளூயன்சா ‘B’, மற்றும் இன்புளூயன்சா ‘C’ என்னும் மூன்று வகையான வைரஸ்களால் ஏற்படுகிறது. இதில் இன்புளூயன்சா ‘A’ மிக அதிகமான அளவிலும், இன்புளூயன்சா ‘C’ மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது. இந்நோயை பரப்பும் வைரஸ் மிகவும் அரிதான மரபணு தொகுதியை பெற்றுள்ளது. தமிழகத்திலும் கடந்த 2011ம் ஆண்டு முதல் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு மட்டும் 3315 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு நடப்பு அக்டோபர் 7ம் தேதி வரை 232 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். அந்த வகையில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 23 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட வில்லை.

பாதிப்புகள் இருந்ததாக மட்டுமே இருந்ததாக தமிழக அரசு அதிகாரிகள் கூறி வருகின்ற நிலையில் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மற்றும் இறந்தவர்கள் தொடர்பான இந்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு மீண்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் ஏற்பட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றவர்களை அவர்களுக்கு வேறு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டி அதுவே மரணத்திற்கு காரணம் என்று சுகாதாரத்துறை கூறி வருகிறது. தீவிர கண்காணிப்பு பணியில் ஆர்வம் காட்டாததாலேயே உயிரிழப்பு நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பன்றிக்காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பாதிப்பில் இருந்து தப்பிக்க

* கைகளை அடிக்கடி சோப்பு உதவியுடன் சுடுநீரில் 15 முதல் 20 நொடிகள் வரை கழுவ வேண்டும். கண், மூக்கு, வாய் போன்றவற்றை கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். நாப்கின் காகிதம் அல்லது கர்சீப் போன்றவற்றை இருமல், தும்மல் வேளையில் பயன்படுத்த வேண்டும். உள்ளங்கைகளால் மூடி தும்மல், இருமல் கூடாது. சளிக்காய்ச்சல் வைரஸ்கள் எளிதில் தொற்றிக்கொள்கின்ற பாத்திரங்கள், குவளைகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு வழங்க கூடாது.

* காய்ச்சல் பாதித்த ஒருவரை 48 மணி நேரத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சுய மருத்துவம் கூடாது. நோய் பாதித்தவரை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க வேண்டும். திரவ உணவுகளை அதிகம் வழங்க வேண்டும். ஒருவருக்கொருவர் கை கொடுத்தல், கூட்ட நெரிசலான இடங்களில் செல்வதை தடுத்தல் வேண்டும். கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் போன்றோர் அதிகம் எளிதில் பாதிக்கப்படுவர் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்

வழக்கமான பருவகால சளிக்காய்ச்சலின் அறிகுறிகள்தான் பன்றிக்காய்ச்சலுக்கும் இருக்கும். காய்ச்சல், இருமல், உடல் நடுக்கம், தொண்டை வலி, தலைவலி, உடல் வலி, களைப்பு, பலவீனமாக இருப்பதை உணருதல், குறிப்பாக உடல் சூடாதல், ஜூரம் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் இருத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். குழந்தைகள், சிறுவர்கள் வேகமான மூச்சு விடுதல், மூச்சு விடுதலில் சிரமம், நீலம் அல்லது பழுப்பு நிறத்தோல், தேவையான அளவு நீர் அருந்த மறுத்தல், நிற்காத கடும் வாந்தி, தூங்கிக்கொண்டே இருத்தல் போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: