தமிழகத்தில் நீடிக்கும் மின்வெட்டால் மக்கள் அவதி: மத்திய அரசு 37,500 டன் நிலக்கரி விடுவிப்பு

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு நீடிப்பதால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தினமும் 70,000 டன் நிலக்கரி கேட்ட நிலையில், மத்திய அரசு பாதியளவு மட்டும் சப்ளையை துவங்கியுள்ளது. இதற்கிடையே, தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழக அரசு டெண்டர் விடுத்துள்ளது. தமிழகத்தில், அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால், ஒவ்வொரு அனல் மின்நிலையங்களும் மூடப்பட்டு வருகின்றன. நிலக்கரி பற்றாக்குறையை போக்கிட, மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். அவர் கூறியபடி, நேற்றுடன் நிலக்கரி பற்றாக்குறைக்கான கெடு முடிந்தது.

தமிழகத்தில், இன்றைய நிலையில் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய இடங்களில் 4,320 மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையங்கள் உள்ளன. அதில், வடசென்னை, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் 4 நிலையங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் மூடப்பட்டதால், 3,200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி ெசய்யப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய 5,130 மெகாவாட்டில், 3,000 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. நீர்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் 2,300 மெகாவாட்டில், 2,200 ெமகாவாட் கிடைக்கிறது. காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய 8,255 மெகாவாட்டில், ஆங்காங்கே மழை பெய்து வருவதால், 1,200 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. சோலார் மூலம் பெற வேண்டிய 2,100 மெகாவாட்டில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி கிடைப்பதாக, தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் எனக்கூறிவரும் தமிழக அரசு, இம்மாதம் துவக்கத்தில் இருந்தே அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னையை சந்தித்து வருகிறது. மின்வெட்டால் மக்கள் பாதித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக மத்திய மின்துறை மற்றும் சுரங்கத்துறை அமைச்சக உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, தமிழகத்துக்கு நிலக்கரி சப்ளைக்கு அனுமதித்துள்ளனர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு, தினமும் 72,000 டன் நிலக்கரி சப்ளை செய்யக் கோரிக்கை விடுத்தது. அதன் தொடர்ச்சியாக, 10 ரேக்குகளில் (ஒவ்வொரு ரேக் என்பது 3,750 டன் நிலக்கரி) நிலக்கரி சப்ளை துவங்கியுள்ளது.

அடுத்த சில நாட்களில், 13 ரேக்குகளில் நிலக்கரி சப்ளை செய்ய ஏற்பாடு செய்ய உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசிடம் கேட்டதோ, 72,000 டன் நிலக்கரி, ஆனால் அவர்கள் 37,500 டன் நிலக்கரி மட்டும் முதற்கட்டமாக அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர். வரும் நாட்களில் கூட, அதிகபட்சமாக 13 ரேக்குகளில், 48,750 டன் அளவிற்கே நிலக்கரியை விடுவிக்க உள்ளனர். பொதுவாக, 20 முதல் 30 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைக்கும் அளவிற்கு, மத்திய அரசு சப்ளை செய்தால் தான், தமிழகத்தின் மின்வெட்டு பிரச்னை தீரும். தற்போது, நிலக்கரி அங்கிருந்து வருவதற்கும், பயன்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதால், என்ன செய்வதென்றே தெரியவில்லை. காற்றாலை மின்சாரம் கைகொடுக்கும் என்று பார்த்தால், அதுவும் தற்போது மிக குறைந்தளவே உற்பத்தி செய்கிறது.

மின்வாரிய உயர்மட்ட அதிகாரிகள், எதிர்கால மின்தேவை குறித்த திட்டமிடாததே, இப்பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து சப்ளை செய்யப்படும் மின்சார வினியோகத்தையும், பராமரிப்பு காரணங்களை கூறி குறைந்தளவே கிடைக்கிறது. வெளிநிறுவனங்களில் மின்சாரம் அதிகளவு வாங்குவதால், ரூ.1,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது. பிரச்னையை சமாளிக்க ஏற்கனவே, வெளிநிறுவனங்களில் மின்சாரம் வாங்கப்படுகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து, 6 லட்சம் டன் அளவிற்கு நிலக்கரி கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மின்தேவை 15,440 மெகாவாட்டாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு 13,500 மெகாவாட்டாக இருந்த மின் தேவை தற்போது அதிகரித்துள்ளதால், மின்தட்டுப்பாடு பிரச்னை நீடிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: