அமெரிக்காவில் வடக்கு கரோலினாவை புளோரன்ஸ் புயல் தாக்கியது: 3 லட்சம் பேர் இருளில் தவிப்பு

வில்மிங்டன்: அதிபயங்கர புளோரன்ஸ் புயல் வடக்கு கரோலினா பகுதியை தாக்கத் தொடங்கியது. அட்லாண்டிக் கடலில் உருவாகி உள்ள ‘புளோரன்ஸ்’ புயல், அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை மையம் கொண்டுள்ளது. புயல் தாக்க வாய்ப்புள்ள வட மற்றும் தென் கரோலினா, விர்ஜினியா மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.  கரோலினா மற்றும் விர்ஜினியாவில் மட்டும் சுமார் 17 லட்சம் மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.15 மணிக்கு வடக்கு கரோலினாவின் துறைமுக நகரான வில்மிங்டன் அருகே ரைட்ஸ்விலி கடற்கரை பகுதியை தாக்கியதாக தேசிய புயல் மையம் தெரிவித்துள்ளது. அங்கு பலத்த சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு சரிந்தன. மின்கம்பங்கள் வெடித்து சிதறின. பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் கொந்தளித்தன.

சூறைக்காற்றுடன் மழையும் கொட்டுகிறது. ஒவ்வொரு மணி நேரத்திலும் 8 செமீ மழை பெய்கிறது. நேற்று முன்தினம் புயலின் தீவிரம் பிரிவு4ல் இருந்து பிரிவு 1ஆக குறைந்ததால் மணிக்கு 150 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது. நியூபெர்ன் பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு கடற்கரையை ஒட்டிய இடங்களில் 10 அடிக்கு மழை நீர் தேங்கியிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய சுமார் 200 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 150 பேர் உதவிக்காக காத்திருப்பதாகவும் மாகாண போலீஸ் லெப்டினன்ட் டேவிட் டேனியல்ஸ் கூறி உள்ளார். இன்று இப்புயல் மிகத் தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல், மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு கரோலினாவில் சுமார் 3 லட்சம் பேர் இருளில் தவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: