அறிந்த தலம் அறியாத தகவல்கள்

15-10-2022 - சனி - சஷ்டி விரதம்

திருச்செந்தூர்

தலையா? கடல் அலையா? - எனும் பாடல் ஒன்று, திருச்செந்தூரில் நடைபெறும் `கந்த சஷ்டி’ உற்சவத்தை வர்ணிக்கும். திருச்செந்தூரின் மகிமைகள், அந்த அளவிற்கு உயர்ந்தவை. அவற்றில் ஒரு சில,

சிலப்பதிகாரம் சொல்லும் முதல் தலம்

முருகப்பெருமானின் வேலாயுதத்தின் பெருமையைச் சொல்லவந்த இளங்கோ வடிகள், முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் சிலவற்றைச் சொல்கிறார். அவற்றில் முதல் இடம் பிடித்திருப்பது, ‘திருச்செந்தூர்’.

 

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே

பாரிரும் பௌவக் கடல் புக்குப் பண்டொரு நாள்

சூர் மா தடிந்த சூடர் இலைய வெள்வேலே

(சிலப்பதிகாரம்)

விஷ ஜுரம் நீக்கும் வேலவன் நூல்

திருக்கோயிலில் மடப் பள்ளியில் வேலைபார்த்து வந்த அடியார் ஒருவர், முருகப்பெருமான் உத்தரவால், ‘திருச்செந்தூர் தல புராணம்’ எழுதினார். அதன் பின் அவர் `வென்றி மாலைக் கவிராயர்’ என அழைக்கப்பட்டார். ஆனால், ஆலயத்தில் இருந்தவர்களோ, கவிராயரின் பெருமை அறியாமல், ‘‘சமயல்காரப்பய! ஸ்தல புராணம் எழுதி இருக்கானாம்! அதை அரங்கேற்றம் வேற பண்ணனுமாம்; போடா! போ!’’ என்று அவமானப்படுத்தி விரட்டி விட்டார்கள். மனம் ஒடிந்து போன கவிராயர், தல புராண ஓலைச்சுவடிக்கட்டை அப்படியே திருச்செந்தூர்க் கடலில் வீசிவிட்டுப் போய் விட்டார்.

கடலில் வீசப்பட்ட தல புராணம், இலங்கையில் ஓரிடத்தில் கரை ஒதுங்கியது. அதைப்பார்த்த முருகன் அடியார் ஒருவர், அதை எடுத்து முழுமையாகப் படித்தார். மெய் சிலிர்ந்து, உடனே அந்தத் திருச்செந்தூர்த் தல புராணத்தைத் தந்தப் பல்லக்கில் வைத்து, வீட்டிற்குக் கொண்டுபோய் விட்டார். நாள்தோறும் அத்தல புராணத்தைப் பாராயணம் செய்து வந்தார். அந்த வேளையில், இலங்கையில் ‘சக்கர சுவாசம்’ எனும், காற்றில் பரவும் நோய், வெகுவாகப் பரவி ஏராளமானோர் இறந்தார்கள்.

ஆனால், திருச்செந்தூர் ஸ்தல புராணத்தைப் பாராயணம் செய்து வந்த அடியாருக்கோ, அவர் இருந்த வீதிக்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. விவரம் அறிந்த அனைவரும், அதன்பின் வந்து ‘திருச்செந்தூர்’ ஸ்தல புராணத்தைப் பிரதி எடுத்துக் கொண்டுபோய்ப் பாராயணம் செய்து நலம் பெற்றார்கள். ஆறுமுகன் அருளால் எழுதப்பட்ட திருச்செந்தூர் ஸ்தல புராணம் இருக்கும் இடத்தில், எந்த ஒரு நோயும் அண்டாது. இலங்கையில் இந்த ஸ்தல புராண ஓலைச்சுவடிக் கட்டு ஒதுங்கிய இடம் `பனை முறி’ என அழைக்கப்படுகிறது. இந்த நூலுக்கு அற்புதமான உரைகள், உள்ளன.  

சங்ககால நூலில் சரவணபவனின் திருச்செந்தூர்

மிகப் பழைமையான சங்ககால நூலான புறநானூற்றில் திருச்செந்தூர் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை

(புறநானூறு)

குரு அருள் பொலியும் திருச்செந்தூர் முருகன்

அசுரர்களுடன் போர்புரியும் முன், அலைகடல் ஓரமாக முருகப்பெருமான் தங்கிய திருத்தலம் இது. அப்போது தேவர்களின் துயரங்களைத் தேவகுருவான பிருகஸ்பதி, முருகப்பெருமானிடம் விரிவாகச் சொல்லி முறையிட்ட திருத்தலம் இது. ஜகத்குரு எனப்புகழப்படும் ஆதிசங்கரர் இங்குள்ள முருகனைத் துதித்து ‘சுப்ரமண்ய புஜங்கம்’ பாடி, தனக்கிருந்த நோய் நீங்கப்பெற்ற திருத்தலம் இது. இன்றும் சுப்ரமண்ய புஜங்கத்தைப் பாராயணம் செய்து நோய் நீக்கம் பெறுபவர்கள் பலர்.

திரும்பி வந்த திருச்செந்தூர் முருகன்

1648-ம் ஆண்டு, நாயக்க மன்னர்கள் மதுரையில் இருந்து ஆட்சி புரிந்த காலம். டச்சு வியாபாரிகள் சிலர் திருச்செந்தூர் ஆலயத்திற்குள் புகுந்து அங்கிருந்த, பளபளவென ஔி வீசிய பஞ்சலோக விக்கிரகமான ‘ஆறுமுக நயினார்’ விக்கிரகத்தைத் தங்கமென எண்ணிக் கொள்ளையடித்துக் கப்பலில் கொண்டுபோய் விட்டார்கள். கப்பல் சற்று தூரம் போனதும், திடீரெனக் கடல் கொந்தளிக்க, கப்பல் தத்தளித்தது.

எந்த நேரத்திலும் கப்பல் கவிழ்ந்து விடும் என்ற நிலை. ‘‘இந்த சாமியாலதான் இந்தப் பிரச்னை’’ என்ற டச்சுக்காரர்கள், ஆறுமுக விக்கிரகத்தைத் தூக்கிக்கடலில் வீசினார்கள். சொல்லி வைத்தாற்போல, புயல் அடங்க, கடல் அடங்கக் கப்பலும் நிலை பெற்றது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் ஆயின. அடியார்கள் எல்லாம் ஆறுமுகன் விக்கிரகம் இன்றிக் கலங்கினார்கள். அப்போது, திருமலை நாயக்கரின் காரியக்காரராக இருந்தவரும், உத்தம பக்தருமான வடமலையப்ப பிள்ளை என்பவர் வேறு விக்கிரகம் செய்ய முயற்சித்தார்.

அவர் கனவில் காட்சியளித்த ஆறுமுகப் பரமன், ‘‘நான் கடலில் இருக்கிறேன். உனக்கு அடையாளம் காட்ட, அங்கே எலுமிச்சம் பழம் கடலில் மிதக்கும். ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கும். அந்த இடத்தில் நீ இறங்கு. நான் மேலே எழுந்து வருவேன்’’ என்று கூறி மறைந்தார். கனவு கலைந்ததும், கந்தக்கடவுள் சொன்னதை அப்படியே செய்தார் வடமலையப்ப பிள்ளை. அவர் கடலில் முழுகித் தேடும்போது, முதலில் நடராஜ விக்கிரகம் ஒன்று அகப்பட்டது. அதன்பின் ஆறுமுக விக்கிரகமும் அகப்பட்டது. மீண்டும் ஆலயத்தில் சேர்க்கப்பட்டது.

இத்தகவல்களை எல்லாம் கல்வெட்டுகள் விவரிக்கின்றன. எம்.ரென்னல் எனும் பிரெஞ்சு நூலாசிரியர், தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆறுமுக விக்கிரகம் கடலில் இருந்த போது, மீன்கள் கொத்திய அடையாளங்களை இன்றும் திருச்செந்தூரில் உள்ள அவ்விக்கிரகத்தில் காணலாம். தொலைந்து போன விக்கிரகத்தை மறுபடியும் கிடைக்கச் செய்த முருகப்பெருமான், நம்மை விட்டு விலகிப்போயிருக்கும் ஆரோக்கியத்தையும், அமைதியையும் மறுபடியும் வழங்குமாறு வேண்டுவோம்.

குமரகுருபரர் பாடிய உத்தம நூல்

குழந்தைச்செல்வம் வேண்டி, விரதம் இருந்து பெற்ற பிள்ளை, ஐந்து வயதாகியும் பேசாமல் ஊமையாக இருந்ததை கண்டு கலங்கிய பெற்றோர்கள், திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானிடம் வேண்டி முறையிட்டு, 48-நாட்கள் அங்கேயே தங்கி விரதம் இருந்தார்கள். ஆறுமுகப் பெருமான் அர்ச்சகர் வடிவில் வந்து, குழந்தைக்குக் காட்சியளித்து, ‘குமர குருபரன்’ எனத் திருநாமமும் சூட்டி அருள்புரிந்து மறைந்தார். ஊமைத்தன்மை நீங்கிப் பாடத் தொடங்கினார் குமர குருபரர். அப்போது அவர் பாடிய ஞான நூலே ‘கந்தர் கலிவெண்பா’.

‘‘ஆறு திருப்பதிகளைத் தரிசித்து ஆறெழுத்தை ஓதுபவர் சிந்தையில் குடி கொண்டிருக்கும் முருகா! செந்தூர்ப்பெருமானே! பகை, அகால மரணம், தடங்கல்கள், நோய்கள், பாதகங்கள், செய்வினை, பாம்பு, பிசாசு, பூதம், தீ, நீர், படை, விஷம், துஷ்ட மிருகங்கள் ஆகியவற்றால் என்றும் எனக்குத் தீங்கு வராமல் அருள் புரிவாயாக! உனது மயில் வாகனம், பன்னிரு தோள்கள், வேல், திருவடிகள், சிவந்தகரங்கள், பன்னிருவிழிகள், ஆறு திருமுகங்கள் ஆகிய இவை எந்தப் பக்கமும் என் முன் தோன்ற வந்து, எனது துன்பங்களை ஒழித்து வரம் தந்தருள வேண்டும்.

எனது உள்ளத்தில் இன்புற்று வீற்றிருந்து, பழுத்த தமிழ்ப்புலமையை அருள் செய்து, இரு வினை - மும்மலம் ஒழித்து அடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்து, பேரின்பத்தை ஊட்டி, என் முன் உனது திருவடி தரிசனம் தந்து ஆட்கொள்வாயாக!’’ என்பது கந்தர் கலிவெண்பாவின் சாரம்.

அல்லல் தீர்த்த ஆறுமுகன் அருளால் பாடப்பட்ட கந்தர் கலி வெண்பா, ஒரு ஞானப் பொக்கிஷம். இதைப் பாராயணம் செய்பவர்கள் துயரங்கள் தீர்ந்து, அனைத்து மங்கலங்களையும் பெறுவார்கள். தலை சிறந்த கல்விமானாகவும் ஆவார்கள் என்பது கண்கூடு. சுலபத்தில் கிடைக்காத பாக்கியம் இது. கந்த சஷ்டி, ஆறு நாட்களும் இயன்றவரை பாராயணம் செய்வோம்! இன்னல்கள் விலகும்! இன்பம் பெருகும்!

திருச்செந்தூரும் மாயூரமும்

சீர்காழியில் அவதரித்த அடியார் ஒருவர், திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானைக் குறித்து, அரும் பெரும் தவம் செய்தார். ஆறுமுகன் நேரில் காட்சியளித்து அருள் மழை பொழிந்து, மெய் ஞானம் அளித்தார். அந்த அடியார்தான், மகாஞானியான `சிற்றம்பல நாடிகள்’. இவரும், இவர் சீடர்களுமாக ஒரே இடத்தில் ஜீவ சமாதி அடைந்தார்கள். அந்த இடம் சித்தர் காடு என அழைக்கப்படுகிறது.  

கார்த்திகை - திருக்கார்த்திகை

கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை அன்று, இங்கே முருகப்பெருமான் சந்நதியில் பசு நெய்யால் விளக்கேற்றி வழிபடுபவர்கள், அசுவமேதயாகப் பலன்களை அடைவார்கள். அதாவது பகை நீங்கி, பேரும் புகழுமாக, உற்றார் - உறவினரோடு சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.

விசுவாமித்திரரின் நோய் நீக்கிய தெய்வம்

விசுவாமித்திர முனிவர் நோயினால் பெரும் அவதிக்கு உள்ளான போது, இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசித்துத் துதித்து, இங்கே வழங்கப்படும் விசேஷப் பிரசாதமான ‘பன்னீர் இலை விபூதிப் பிரசாதம்’ பற்று நோய் நீங்கினார். மாமுனிவர்களின் மனக்குறையையும் தீர்க்கும் தலம் இது.

முத்தம்மாவும் முருகப்பெருமானும்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் எழுதிய ‘பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்’ எனும் நூலை திருச்செந்தூர் ஆலயத்தில் அடியார்கள் பாராயணம் செய்ய, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் முத்தம்மா எனும் முதியவயதுப் பெண் மணி. அந்தப் பெண்மணிக்கு நேருக்குநேராகக் காட்சிகொடுத்த முருகப்பெருமான், ‘‘அம்மா!  இந்தப் பரிபூரண பஞ்சாமிர்த வண்ணத்தை, இசையுடன் பாராயணம் செய்யச்சொல்! இது எங்கெல்லாம் படிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் நான் இருந்து அருள் புரிவேன்!’’ என்று வாக்குறுதி அளித்தார். திருச்செந்தூர் ஆண்டவன் சொன்னபடியே, அந்நூலைப் பாராயணம் செய்து, பன்னிருகைப்பரமன் அருளைப் பெறுபவர்கள் ஏராளம். 20-ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூரில் நடந்த நிகழ்வு இது.

ஒன்றும் ஆறும்

திருச்செந்திலாண்டர் பாலசுப்பிரமணியனாக, ஒரு முகம் - நான்கு திருக்கரங்கள் கொண்டு, கிழக்கு முகமாக எழுந்தருளி இருக்கிறார். உற்சவ மூர்த்தியான சண்முகர், ஆறுமுகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களோடு வள்ளி - தெய்வானை சமேதராகத் தரிசனம் தருகிறார்கள்.

குமார தந்திரமும் ஆகமமும்

மூலவருக்குக் குமார தந்திர முறையிலும், உற்சவரான சண்முகருக்குச் சிவாகம முறையிலும் வழிபாடுகள் நடக்கின்றன.

வில்லேந்திய வேலன்

குமரவிடங்கப்பெருமான் எனும் திருநாமத்தில் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், வலது கரங்களில் முன் கையில் அம்பும், பின் கையில் சக்தி வேலும், இடது கரங்களில் முன் கையில் வில்லும், பின் கையில் வச்சிரப் படையும் கொண்டு தரிசனம் தருகிறார்.

திருமணத் தடை நீக்கும் திருச்செந்தூர்த் திருப்புகழ்

இத்தலத்திற்கு உண்டான ‘விறல் மாறன் ஐந்து’ எனும் திருப்புகழைப் பாராயணம் செய்தால், எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் அது நீங்கி, நல்ல முறையில் திருமணம் நடக்கும்.

Related Stories: