திருச்சானூர் கோயில் பிரமோற்சவத்தின் 6வது நாள் : கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

திருமலை: திருச்சானூர் கோயில் பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று இரவு கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி அடுத்த திருச்சானூர் அலமேலுமங்காபுரம் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அன்று முதல் தினமும் ஒரு வாகனத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.பிரமோற்சவத்தின் ஐந்தாவது நாளான நேற்றுமுன்தினம் காலை மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கஜ வாகன வீதி உலா நேற்றுமுன்தினம் இரவு நடந்தது.

இந்நிலையில் பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் சர்வ பூபாள வாகனத்தில் எழுந்தருளி  பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதிஉலாவின்போது குதிரை, யானை, காளைகள் ஊர்வலமாக அணிவகுத்து செல்ல பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் நடந்தது. மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த அன்னமாச்சார்யா, தாச சாகித்யா, இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக பக்தர்கள் வேடமணிந்து வந்தனர். வீதிஉலாவின் போது ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு கருட வாகனத்தில் தாயார் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories: