திருப்பதி கோயிலில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருமலை:  திருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 7வது நாள் இரவு அலங்கரிக்கப்பட்ட சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மகா தேரோட்டம் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 13ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் கருடன் உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று காலை ஏழு குதிரைகளுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி நான்குமாடவீதியில் உலா வந்து திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடி பங்கேற்றனர். மேலும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாரணாம்பட்டையை சேர்ந்த ஸ்ரீவாரி அறக்கட்டளை சார்பில் தப்பாட்டம் அடித்தபடி பங்கேற்றது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வெண்ணெய் தின்னும் கிருஷ்ணர் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று மகா தேரோட்டம் நடக்கிறது. பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதியில் உலா வர உள்ளனர்.

Related Stories: