வேட்பாளர் குளறுபடி… அமமுக நெருக்கடி ஆட்டம் காண்கிறது அதிமுக அஸ்திவாரம்

ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் அதிமுக தலைமை அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியல் அக்கட்சியினரிடையே பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 அமைச்சர்கள், 47 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும் சேதாரத்தை அதிமுக சந்திக்க உள்ளதை தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களை உடனடியாக மாற்று என்று நடக்கும் தீக்குளிப்பு, கருப்புக்கொடி, மறியல் போராட்டங்கள் உணர்த்துகின்றன.கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து 60 வாக்குகளைப் பெற்றது. திமுக கூட்டணி 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 374  வாக்குகளைப் பெற்றது. ஆனால், இந்த தேர்தல் களத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைந்துள்ளன. அத்துடன் கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. கருணாஸ் தலைமையிலான முக்குலோத்தோர் புலிப்படையும் விலகியுள்ளது.இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: ஜெயலலிதா இல்லாமல் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து நிற்கும் தேர்தல் இது. அத்துடன் தமிழகத்தில் ஓட்டு வங்கியே இல்லாத  பாஜக, வட மாவட்டங்களில் மட்டும் கால் ஊன்றியுள்ள பாமக போன்ற கட்சிகளுக்கு அதிமுக அதிக சீட்டுக்களை வழங்கியுள்ளதற்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா இருக்கும் வரை பெட்டி பாம்பாக இருந்த பாஜ, தற்போது அதிமுகவை பெட்டி பாம்பாக மாற்றியுள்ளது அக்கட்சியின் உண்மையான தொண்டர்களுக்கு கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.ஏற்கனவே  இரட்டை தலைமையின் கீழ் தான் அதிமுக நடக்கிறது என்பதை  வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் செம்மலை,  ஆறுக்குட்டி, நரசிம்மன், மனோரஞ்சிதம், கம்பம் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோருக்கு இந்த முறை போட்டியிட  வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.அமமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு மீண்டும் அதிமுக பக்கம் சாய்ந்த கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோருக்கும் இம்முறை அதிமுக கல்தா கொடுத்துள்ளது. `தனக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொலை மிரட்டல் விடுத்தார்’ என பகிரங்கமாக  பேசிய சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மீண்டும் போட்டியிட அதிமுக சீட் வழங்கவில்லை. இதன் காரணமாக அவர் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்துள்ளார். தற்போது சாத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராக அவர் களமிறங்கியுள்ளது அதிமுக வேட்பாளருக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.அதிமுகவின் 60 புதிய வேட்பாளர்களில் அதிகபட்சம் எடப்பாடி தரப்பினர் என்பதால் ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு சீட்டு கிடைக்கவில்லேயே என்ற ஆதங்கத்தில் உள்ளனர்.  அத்துடன் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அத்தொகுதிகளை பாஜ, பாமகவிற்கு தாரை வார்த்தது அதிமுகவினரை சோர்வடைய வைத்துள்ளது.அதிமுக வெற்றி பெற்ற கும்மிடிப்பூண்டி, சோளிங்கர், மேட்டூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், மயிலாடுதுறை ஆகியவை இந்த முறை பாமக வசம் போய் உள்ளது. தேபோல முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வெற்றி பெற்ற ராமநாதபுரம், சிவசுப்பிரமணி வெற்றி பெற்ற மொடக்குறிச்சி ஆகியவற்றை பாஜவிடம் அதிமுக வழங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை தோற்கடிப்போம் என  வெளிப்படையாகவே அக்கட்சியினரே போராட்டம் நடத்தியுள்ளனர். இவற்றின் காரணமாக கடந்த தேர்தலில் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக கூட்டணி, இந்த முறை மகத்தான வெற்றி பெறும் என்கின்றனர்.அதிமுக தோல்வியை நிர்ணயிக்கப்போவதில் அமமுக வாக்குகளுக்கும் பங்கு இருக்கும் என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `அமமுக, ஓவைசி கட்சி, விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு, கோகுல மக்கள் கட்சி, மருது சேனை, எஸ்டிபிஐ  ஆகியவை இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஏற்கனவே அதிமுகவில் சீட்டு கிடைக்காத பல வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அமமுகவில் சேர்ந்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர்கள் பலரின் தோல்விக்கு அமமுகவும் காரணமாக இருக்கப் போகிறது’ என்று தெரிவித்தனர்.பணபலம், அதிகார பலம் ஆகியவற்றை மீறி  மக்கள் பலத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அதிமுக கூட்டணியினரே கூறி வருவது தான் இந்த தேர்தலில் ஹைலைட்டான விஷயமே….

The post வேட்பாளர் குளறுபடி… அமமுக நெருக்கடி ஆட்டம் காண்கிறது அதிமுக அஸ்திவாரம் appeared first on Dinakaran.

Related Stories: