28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்..! 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு..! தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். கொரோனா பரவலுக்கு பின் தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புதிய தொழிற் கொள்கை வகுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். புதிய தொழிற்கொள்கை தற்போது தயாராகி விட்ட நிலையில் அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.

கடந்த 2 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில், தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய தொழிற்கொள்கை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செய்யும் கொள்கை உள்ளிட்டவை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை சென்னையில் இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை அடிப்படையில் கொள்கை இன்று வெளியிடப்படுகிறது.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையையும் வெளியிட உள்ளார் முதல்வர் பழனிசாமி. இன்றைய நிகழ்ச்சியில் முதல்வர் முன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழக அரசின் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பழைய ஒப்பந்தங்கள் அடிப்படையில் 20 தொழிற்நிறுவனங்களின் தொழில் நிறுவன உற்பத்தியையும் இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். ஒரகடம், கும்மிடிபூண்டி ,மணப்பாறை ,தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் சிப்காட் தொழில் பூங்காவுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.

Related Stories: