விளாத்திகுளத்தில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற பெற்றோர் கோரிக்கை-குழந்தைகளை அனுப்பவும் தயக்கம்

விளாத்திகுளம் : விளாத்திகுளத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். விளாத்திகுளம் பஸ் நிலையம் எதிரே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு ஆங்கில மற்றும் தமிழ் வழியில் கற்பிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடம், தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இக்கட்டிடம் பயன்பாட்டில் இல்லை என்றாலும், பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணியிடம் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பழுதடைந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். இந்த கட்டிடத்தால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப தயக்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் கூறுகையில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டிடத்தை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கடந்த பல ஆண்டுகளாக கட்டிடத்தை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மழை காலம் என்பதால் பள்ளி கட்டிடத்தை சுற்றி செடிகள் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்திற்குள் வந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்துச் சென்றனர். தொடர்ந்து மிதமான மழை பெய்து வருவதால், அசம்பாவிதம் நிகழும் முன்பு பழுதான கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம், என்றனர்….

The post விளாத்திகுளத்தில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற பெற்றோர் கோரிக்கை-குழந்தைகளை அனுப்பவும் தயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: