விராலிமலை பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை, ஏப்.4: விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் அதிகாலை முதல் விரதமிருந்து மாலையில் கோயில் வந்து சிவனை மனமுருகி வழிபாடு நடத்தி சென்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்குப் பின் வரும் இரண்டு பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும். சிவனின் வாகனமான நந்திக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்து அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

நந்தி தேவர் தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு காட்டப்படும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசித்தால் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் என்பது ஐதீகம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மஹாப் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ காலங்களில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷம் அன்று வழிபடும் போது 5 வருஷம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும். அந்தவகையில் விராலிமலை மலைக்கோயில் சிவன்,வன்னி மரம் வன்னீஸ்வரர், தெப்பகுளம் சிவன் கோயில், இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர், அன்னவாசல் தர்மசவர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர், குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாபுரீஸ்வரர், கைகாட்டி பளுவஞ்சி அகத்தீஸ்வரர்,ஆலத்தூர் அகத்தீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

The post விராலிமலை பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: