விபத்துகளை தடுக்க 38 இடங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு

நாமக்கல், ஆக.9: நாமக்கல் மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்க 38 இடங்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். நிரந்தர தீர்வு ஏற்படுத்த அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 38 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கடந்த ஒரு வாரமாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த களஆய்வு பணியை கடந்த வாரம் நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலை பாப்பிநாய்க்கன்பட்டியில் மாவட்ட கலெக்டர் உமா, எஸ்பி ராஜேஸ்கண்ணன் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இது போன்ற கள ஆய்வு மாவட்டம் முழுவதும் 38 இடங்களில் நடந்து வருகிறது. இந்த ஆய்வுக்கு 2.0 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டு தோறும் அதிகரிக்கும் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகம் நடைபெற்ற பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் மட்டும் கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சாலை விபத்துக்கான காரணம், அதை தவிர்க்க உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை, நிரந்தர தீர்வு கான மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பிவைக்கப்படும். கடந்த ஆண்டு இது போன்ற அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையை தொடர்ந்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த அரசு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி இந்த ஆண்டும் அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பி வைக்கப்படும். பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு அந்த இடங்களில் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது. இதற்கான முன்ஏற்பாடு நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து போக்குவரத்து ஆணையரின் உத்தரவை பெற்று சாலைபாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றனர்.நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளை விட மாநில நெடுஞ்சாலைகளில் தான் விபத்துகள் அதிகம் நடந்துள்ளது. எனவே மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துக்கான காரணம் குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து பகுதியிலும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இரண்டு வழிச்சாலைகள் கூட 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. அந்த இடங்களில் வாகன ஓட்டுனர்கள் அஜராக்கிரதையாகவும், அதிவேகமாவும் வாகனம் ஓட்டுவதும் விபத்துக்கு காரணமாக அமைகிறது. இதனால் இதை தடுக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

The post விபத்துகளை தடுக்க 38 இடங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: