வாக்காளர்களுக்கு அதிமுகவினர் தாராளமாக பணப்பட்டுவாடா: வேலூரில் பெயர் பட்டியலுடன் 18 லட்சம் பறிமுதல்

வேலூர்:  தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. அபாரமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இதனால், ஆளுங்கட்சியாக அதிமுகவினர் எப்படியாவது பணம் கொடுத்தாவது வெற்றி பெற முயற்சிக்கின்றனர். அதனால், வாக்கு பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் தேர்தல் மேலிட பார்வையாளர் அமித்கர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காட்பாடி மெட்டுக்குளம் காட்பாடி- சித்தூர் சாலையில் தனியார் ஓட்டல் மற்றும் லாட்ஜ் அருகில் காருடன் கும்பல் ஒன்று பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்ததை பார்த்து விசாரிக்க சென்றனர். இதைப்பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவர்களில் ஒருவரை விரட்டி பிடித்து 15 ஆயிரத்தையும், வாக்காளர் பட்டியலையும் கைப்பற்றினர். தொடர்ந்து தப்பியோடிய கும்பல் அருகில் உள்ள லாட்ஜில் நுழைந்தனர்.இதை பார்த்த குழுவினர், லாட்ஜை சுற்றிவளைத்தனர். அங்கு ஒரு அறையில் இருந்த 7 பேரை பிடித்தனர். அவர்களிடமும் கட்டுக்கட்டாக 500 நோட்டுகளும், வாக்காளர் பட்டியலும் கைப்பற்றப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பணம் கொடுத்தவர்களின் பெயர்கள் மட்டும் தனியாக மையினால் குறிக்கப்பட்டிருந்தது. ரொக்கப்பணம் மொத்தம் 18 லட்சத்து 56 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அதிமுகவினர் என்றும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்காக வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ₹500 வீதம் பணத்தை வழங்குவதற்காக வாக்காளர் பட்டியலை பார்த்து பிரித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காட்பாடி போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் கணேஷ்(28), நரேஷ்(36) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரைக்குளம், தேரிவிளை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும்போது பறக்கும்படை குழுவினர் கையோடு ஒருவரை பிடித்தனர். அவரிடம் ரூ.10 ஆயிரத்து 500 பணம் இருந்தது. அவர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன் பன்னீர்செல்வியின் (அதிமுக) கணவர் முருகன் ஆவார். பிடிபட்டவர் உடனடியாக தென்தாமரைக்குளம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அமைச்சர் சண்முகம் மீது வழக்கு: விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி. சண்முகம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இவர் பிரசாரத்தின்போது, பெண்களுக்கு பணம் வழங்கிய வீடியோ வைரலானது. இந்த வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய தேர்தல் நடத்தும் அதிகாரி ஹரிதாஸ், சண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், அதிமுக நிர்வாகி கிருஷ்ணா, வேட்பாளர் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் பெயர் தெரியாத மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்புதுகையில் அதிமுக 80 கோடி பதுக்கல்?புதுகை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில், விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் பட்டுவாடா செய்ய இவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மோப்பம் பிடித்த ஐடி அதிகாரிகள், விஜயபாஸ்கர் அண்ணன் கல்லூரியில் வேலை பார்க்கும் வீரபாண்டி என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையில் 50 லட்சம் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்தநிலையில், முத்துப்பட்டினம் என்ற இடத்தில் வசிக்கும் தொழிலதிபரின் வீட்டில் பெரும் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், சென்னை பிரபல குவாரி மன்னனின் தொழில் பார்ட்னர். இந்த குவாரி மன்னன் ஓபிஎஸ் மற்றும் மாஜி தலைமை செயலாளருக்கு நெருக்கமானவர். பணமதிப்பிழப்பு நேரத்தில் இவரது வீட்டில் கட்டுக்கட்டாக புதிய ₹2000 நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் சுமார் 80 கோடி வரை பதுக்கி வைத்து பணப்பட்டுவாடாவுக்கு தயாராகி வருகின்றனர். இதை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று முதல் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதை தடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன….

The post வாக்காளர்களுக்கு அதிமுகவினர் தாராளமாக பணப்பட்டுவாடா: வேலூரில் பெயர் பட்டியலுடன் 18 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: