வாகன நெரிசலை குறைக்க பரனூர் சுங்கச்சாவடியில் கூடுதலாக 2 பூத் திறப்பு: போலீசார் குவிப்பு

செங்கல்பட்டு, ஜூன் 12: பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசலை குறைக்க கூடுதலாக 2 பூத்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், போலீசார் அதிகளவில் போக்குவரத்தை சரி செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தென் மாவட்டங்களில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் அரசு பேருந்து உள்பட பல்வேறு வாகனங்களில் சென்றனர்.

தற்போது, கோடை விடுமுறை முடிந்து, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகளும் இன்று (12ம் தேதி) திறக்கப்படுகிறது. இதனால், தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றவர்கள், நேற்று மாலை முதல் சென்னையை நோக்கி படையெடுத்தனர். இதனால், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, வாகன நெரிசலை குறைக்க செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அசோகன் தலைமையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பரனூர் சுங்கச்சாவடியில் மொத்தம் 12 பூத்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 பூத்களும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 6 பூத்களும் உள்ளன. நேற்று மாலை முதல் இன்று காலை வரை சென்னையை நோக்கி ஏராளமான மக்கள் அரசு பேருந்து, கார் என பல்வேறு வாகனங்களில் சென்னையை நோக்கி வந்ததால், வாகன நெரிசலை தவிர்க்க, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக 2 பூத்கள் திறக்கப்பட்டுள்ளன.

The post வாகன நெரிசலை குறைக்க பரனூர் சுங்கச்சாவடியில் கூடுதலாக 2 பூத் திறப்பு: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: