வரலாற்றில் 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணையில் இருந்து 1.23 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்: காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்; 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் 1.23 லட்சம் கனஅடி நீர் முழுவதும், வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 11 மாவட்ட மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. நேற்றும் அதே அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறது.அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 11ம் தேதி  நீர்மட்டம் 98.00 அடியாக இருந்த நிலையில், தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 22 அடி வரை உயர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி அணை நிரம்பியது. அப்போது, அணைக்கு விநாடிக்கு 1,18,671 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி நிரம்பிய மேட்டூர் அணை, டிசம்பர் 25ம் தேதி முதல் குறையத்தொடங்கியது. 202 நாட்களுக்கு பின்பு, நேற்று மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது. அணை வரலாற்றில் முழுமையாக நிரம்புவது இது 42வது முறையாகும். இதையடுத்து, உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பகுதியில், நீர்வளத்துறை அதிகாரிகள் மலர்தூவி காவிரித்தாயை வரவேற்றனர். முதற்கட்டமாக விநாடிக்கு 25,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரவு  8 மணி நிலவரப்படி, அணைக்கு வந்த 1.23 லட்சம் கனஅடி நீரும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடியும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக ஒரு  லட்சம் கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது. இதை காண மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், மேட்டூர் அணை விழாக்கோலம் பூண்டுள்ளது. அணை நிரம்பியதையடுத்து, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.* ஆற்றின் நடுவே நின்று செல்பி எடுத்தபோது வெள்ளத்தில் சிக்கிய 3 வாலிபர்கள் மீட்புமேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் காவிரியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை காண சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த மல்லிகுட்டையை சேர்ந்த நெசவுத் தொழிலாளர்கள் பிரபு(26), தினேஷ் (23), ஆகியோரும், அவர்களின் நண்பர் கவின்(23) ஆகியோர் நேற்று சென்றனர். மேட்டூர் அணைக்கு அருகே காவிரி ஆற்றின் நடுவில் உள்ள திட்டின் மீது ஏறி நின்று மூவரும் செல்பி எடுத்தனர். அப்போது நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால், வெள்ளத்தில் சிக்கிய அவர்கள், பாறையை பிடித்துக்கொண்டு தத்தளித்தனர். காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள், தங்களின் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு, அங்கு சென்று அவர்களின் இடுப்பில் கயிற்றை கட்டி அவர்களை ஒவ்வொருவராக இழுத்து மீட்டனர். அவர்களின் பெற்றோர்களை வரவழைத்த வருவாய்த்துறை அதிகாரிகள், அறிவுரை கூறி மூவரையும் ஒப்படைத்தனர். …

The post வரலாற்றில் 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணையில் இருந்து 1.23 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்: காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்; 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: