வயலுக்குள் பாய்ந்த தனியார் பஸ்: பயணிகள் உயிர் தப்பினர்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தனியார் பேருந்து சாலையோரத்தில் இருந்த வயலுக்குள் பாய்ந்தது. இதில் பயணம் செய்த 8 பயணிகள் உட்பட 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து அணைக்கரை வழியாக அரியலூருக்கு தனியார் பேருந்து நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஒரு பெண் உட்பட 8 பயணிகள் இருந்தனர். அப்போது திருப்பனந்தாள் பட்டம் பகுதி மண்ணியாற்று பாலம் அருகே சென்ற போது எதிரே வந்த பேருந்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் பேருந்தை திருப்பும் போது எதிர்பாராதவிதமாக தேசிய நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை நோக்கி பேருந்து சென்றது.அப்போது டிரைவர் பிரேக் போடுவதற்கு முயன்ற போது மழைநீர் சேற்றில் பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி அந்த பகுதியில் இருந்த வயலுக்குள் பஸ் பாய்ந்தது. இதில் குளம்போல் தேங்கிருந்த மழைநீரில் பேருந்தின் முன்பகுதி சிக்கியது. அப்போது அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த அரசு தலைமை கொறாடா கோவி.செழியன், காரை விட்டு இறங்கி பேருந்தில் இருந்த 8 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் ஆகியோரை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்தார்.பின்னர் திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதவியுடன் பேருந்தில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டதால் 8 பயணிகள் உட்பட 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்….

The post வயலுக்குள் பாய்ந்த தனியார் பஸ்: பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: