லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. யாரெல்லாம் குற்றவாளிகள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு ?.. உ.பி.அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!!

லக்னோ: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கிராமத்தில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது பாஜவினர் சென்ற வாகனங்கள், விவசாயிகள் மீது மோதி தூக்கி வீசியது. இதில், 4 விவசாயிகள் பலியாயினர். இதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 4 பாஜ.வினர், ஒரு பத்திரிகையாளர் என 5 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது மோதிய கார், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அமைச்சரின் மகனும் காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் லக்கிம்பூர் விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் நேற்றிரவு தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து மேற்கண்ட வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும்  திபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹியா ஹோலி ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடந்த விஷயம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு தனி நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக அறிக்கை அளிக்கவும் தயாராக இருக்கிறோம், ‘என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர். வன்முறையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் ?யாரெல்லாம் குற்றவாளிகள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்திருக்கிறீர்கள்? யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விரிவான விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு உடனே மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரப் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கொல்லப்பட்ட விவசாயி ஒருவரின் தாய், கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் கிடைத்தது என்பதை குறிப்பிட்ட நீதிபதிகள், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள விவசாயின் தாயிக்கு உரிய மருத்துவசிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர். …

The post லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. யாரெல்லாம் குற்றவாளிகள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு ?.. உ.பி.அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: